பா.ஜ.க. அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து- உதயநிதி ஸ்டாலின்!

Advertisements

சென்னை:

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைத் தகர்க்க முயல்கிறது பாஜக அரசு எனத் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியேற்ற, அமைச்சர் துரைமுருகன் இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி, இந்து என்.ராம், எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார்.

இந்நிலையில், திமுக சட்டத்துறை மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாஜக அரசு அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைத் தகர்க்க முயல்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், “திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன். பல முக்கியமான வழக்குகளில் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து, உரிமைகளைத் திமுக சட்டத்துறை வென்றது.

திமுக அரசு கொண்டு வந்த சட்டங்கள் வலிமையானவை. உள் ஒதுக்கீடு, அனைத்து சாதியினர் அர்ச்சகர், பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவை முன்மாதிரி. எண்ணற்ற சட்ட போராட்டங்களை நடத்தி வழக்கு தொடுத்து வெற்றி கண்டோம்.

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்றவற்றை தகர்க்கும் முயற்சியில் மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மோடி அரசுக்கு எதிராக அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிக்கிறது இந்தியா கூட்டணி” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாப்பதிலும், சட்டரீதியான போராட்டங்களை நடத்தி பல உரிமைகளை வென்றெடுப்பதிலும், எப்போதும் முன்னணியில் நிற்பது, நம் திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் நடைபெறக் காரணமே, தந்தை பெரியாரும் திராவிட முன்னேற்றக் கழகமும்தான் என்பது இந்திய வரலாற்றில் நிலைத்துவிட்ட உண்மை. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, நீதிக்கட்சி அரசால் வழங்கப்பட்ட வகுப்புவாரி உரிமைக்கு, குறிப்பாகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது தந்தை பெரியாரும் திராவிட முன்னேற்றக்கழகமும் தமிழ்நாட்டில் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தினர். அதன் தாக்கத்தை உணர்ந்த, பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான ஒன்றிய அரசு, மாநில அளவிலான இட ஒதுக்கீட்டை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம்’ என்று முதல் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தது. அன்றைய சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் இதர பிற்படுத்தப்பட்டவர்’ என்னும் பிரிவை ஏற்படுத்தி, இட ஒதுக்கீட்டை உறுதி செய்தார்.

அன்றிலிருந்து தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டிலும் அகில இந்திய அளவிலும் சட்டரீதியாகப் பல முக்கியமான செயற்பாடுகளை, நம் கழகமும் சட்டத்துறையும் முன்னெடுத்துள்ளன.

சட்டம் ஒரு இருட்டறை; வக்கீலின் வாதம் ஒரு விளக்கு’ என்றார் பேரறிஞர் அண்ணா. அப்படி பல முக்கியமான வழக்குகளில் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து, உரிமைகளை வென்றது, நம் கழக சட்டத்துறை.

மோடியின் தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு சமூகநீதிக்கு எதிராகச் செயல்பட்டபோது, தமிழக மருத்துவக் கல்லூரிப் படிப்புக்கான இடங்களில் மத்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) முறையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமெனக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து வெற்றியும் கண்டோம்.

இப்படி நாம் நடத்திய எண்ணற்ற சட்டப் போராட்டங்களுக்கு நீண்ட பட்டியல் உண்டு. அதேபோல் கழக அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம், பெண்களுக்கான சொத்துரிமை போன்ற பல சட்டங்கள் இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்திருக்கின்றன.

நம் கழக அரசால் கொண்டுவரப்படும் சட்டங்கள், எதிரிகளால் முறியடிக்கப்படாத அளவுக்கு வலிமையானவையாக இருக்கின்றன என்பதற்கு, உள் இட ஒதுக்கீடு தொடர்பாக, சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே உதாரணம். ஒடுக்கப்பட்டோரில் ஒடுக்கப்பட்டோரான அருந்ததியர்களுக்கு 2009-இல் 3% உள் இட ஒதுக்கீடு வழங்கி முத்தமிழறிஞர் கலைஞர் உத்தரவிட்டார்.

சமீபத்தில், உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு’ என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சமூகநீதியை நிலைநாட்டியதுடன் மட்டுமல்லாது, 15 ஆண்டுகளாகத் தொடரும் முத்தமிழறிஞர் கலைஞரின் சாதனைக்கும் பலம் சேர்த்தது.

இன்று மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசால், அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்ற அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைத் தகர்க்கும் முயற்சியில், மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதற்கு எதிராக, இந்தியா கூட்டணி அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் அரசியல் சட்டத்தின் முகவுரையை வாசிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

கூட்டாட்சித் தத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் சீர்குலைக்கும் வகையில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவரும் பொது சிவில் சட்டம்’, ஒரே நாடு ஒரே தேர்தல்’, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா’ ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்து, நாடாளுமன்றத்தில் போராடி வருகிறோம். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் கொண்டுவரப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை, நம் கழக சட்டத்துறை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள, நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில், ஒரு நபர் கமிட்டி அமைத்து உத்தரவிட்டிருந்தார். இந்தக் குழுவும் புதிய குற்றவியல் சட்டங்கள்குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், நம் திராவிட முன்னேற்றக்கழக சட்டத்துறை, மூன்றாவது மாநில மாநாடு நடத்துவதை எண்ணி, மகிழ்ச்சியடைகிறேன். அரசியல் சட்டத்தின் மாண்பை உயர்த்திப்பிடிக்கும் வகையிலும், அரசியல் சட்டத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்குறித்து விவாதிக்கும் வகையிலும், இந்த மாநாட்டின் கருத்தரங்கும் கலந்துரையாடலும் திட்டமிடப்பட்டிருப்பது மிகப்பொருத்தமானது.

சமூகநீதி, மொழியுரிமை, மாநில உரிமைகள், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை சட்டரீதியாக நிலைநாட்டும் வகையில், நம் கழக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *