கொடைக்கானலில் கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை!

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. 2 நாட்களாக அவ்வப்போது திடீரெனக் கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

எதிரே யார் வருகிறார்கள் என்பது கூடத் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் என அனைத்து வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர்.

வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஓட்டிச் செல்கின்றனர். பல்வேறு தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்த நிலையில் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால் மாணவ-மாணவிகள் ஏமாற்றமடைந்தனர். பள்ளிக்குச் செல்வதா வேண்டாமா என அரசு நிர்வாகம் மாணவ- மாணவிகளைக் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 8 மணிவரை அரசுப் பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வராததால் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு மத்தியில் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

உள்ளூர் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் முன்னதாகவே எந்த அறிவிப்பையும் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்காததால் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பதில் தாமதம் காட்டியது.

அதிகாலை முதலே மின்சாரமும் இல்லை கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழையும் இருந்து வந்ததால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொலை தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மலைகிராமங்களிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *