Arulmigu Muppathamman Temple:தீராத நோயை தீர்க்கும் அம்மன்!

Advertisements

நமக்கு வாழ்க்கையில் சோதனை வரும் போது நம் மனம் இயல்பாக கடவுளை நாடும். அப்படியாக மக்கள் சோதனைக் காலத்தில் அம்மனை நாடி செல்லும் கோவில் தான் முப்பாத்தம்மன் கோவில்.

சென்னை நகரின் தியாகராயநகரில் பனகல் பூங்கா அருகே வடபழனி செல்லும் உஸ்மான் ரோட்டின் இடது புறம் மகாராஜபுரம் சந்தானம் சாலையில் அருள்புரிகிறாள் அருள்மிகு ஸ்ரீ முப்பாத்தம்மன். முப்போகம் விளையும் பூமியில் நின்று அருள் புரிவதால், முப்போகத்தம்மாள் என்று அழைக்கப்படுகிறாள்.

ஆடி  மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். சக்தி தேவி தவமிருந்து சிவனைப் போற்றியதால், அவரே மனம் மகிழ்ந்து இந்த மாதத்தை அம்மனுக்கு உரியதாக வரமளித்து கொண்டாடப் பணித்தார். இதனாலேயே இந்த மாதத்தில் வேறு எந்த சுபநிகழ்ச்சியும் வைக்காமல் அம்மனைக் கொண்டாட மட்டுமே செய்கிறோம். பிராமி, மகேஸ்வரி, வாராகி, இந்திராணி, கௌமாரி, சாமுண்டீஸ்வரி பூரணி, புராந்தகி, புராதனி, சங்கரி, சாம்பவி, சுதந்தரி, சுமங்கலை, நாரணி, த்ரியம்பகி என ஆயிரம் ஆயிரம் திருநாமங்களால் போற்றப்படும் மகாசக்தி ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு காரணத்துக்காகவும் புதிய பெயர் தாங்கி அருள்பாலிக்கிறாள். மஹாசக்தி முப்பாத்தம்மன் பற்றி காண்போம்.

 

முப்போகம் விளையும் பூமியில் நின்று அருள் செய்யும்  சக்தியை நமது முன்னோர்கள், `முப்போகத்தம்மாள்’ என்று பக்தியோடு வணங்கி வந்தனர். அவளே விளைச்சலுக்கு உரிய தேவியாக இருந்து, வேளாண் மக்களைப் பாதுகாத்து வந்தாள். காலப்போக்கில் முப்போகத்தம்மாள் என்பது மருவி `முப்பாத்தம்மாள்’ என்று மாறினாள் என வரலாறு தெரிவிக்கிறது.

சென்னை நகரின் தியாகராயநகரில் பனகல் பூங்கா அருகே வடபழனி செல்லும் உஸ்மான் ரோட்டின் இடதுபுறம் மகாராஜபுரம் சந்தானம் சாலையில் அமர்ந்து ஆட்சி செய்து வருகிறார் அருள்மிகு ஸ்ரீ முப்பாத்தம்மன்.

புற்றில் இருந்து வெளிப்பட்ட நல்லபாம்பு ஒன்று இங்கே கோயிலைக் கட்ட பணித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பெருவெள்ளத்தில் கொண்டு வரப்பட்ட முப்பாத்தம்மன் சிலை புற்றை வந்து அடைய அதைக்கொண்டே கோயில் உருவானதாகச் சொல்கிறார்கள். கணபதி, நவகிரகங்கள், முருகப்பெருமான், ஐய்யப்பன், ஆஞ்சநேயர் எனப் பல சந்நிதிகளைக் கொண்டு இந்த ஆலயம் அழகுற அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தின் சிறப்பே இங்கு அமைந்துள்ள பிரமாண்ட புற்றுதான். சுற்றிலும் நாகர் சிலைகள் அமைந்து இருக்கும் இந்தப் புற்றில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமம் தெளித்து அம்மனை வேண்டிக் கொண்டால் தீராத நோயையும் தீர்த்துவைப்பாள் முப்பாத்தம்மன் என்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள்.

கடுமையான நோய் கொண்டவர்கள், நாக தோஷம் உள்ளவர்கள், குழந்தை வரம் வேண்டுவோர், திருமண வரம் வேண்டுவோர் எனப் பலரும் இங்கு வந்து இந்தப் பாம்பு புற்றை சுற்றி வந்து பால் ஊற்றி பலன் பெறுகிறார்கள்.

எல்லா வெள்ளிக்கிழமையும் இங்கு சிறப்பான வழிபாடு நடந்தாலும், ஆடி மாத வருடாந்திர உற்சவ விழா இங்கு வெகு சிறப்பானது. நாகதோஷம் இருப்பவர்களுக்கு இந்த ஆலயம் சிறப்பானது என்று இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சென்னையில் உள்ளவர்கள் ஒரு முறை சென்று வாருங்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *