கல்லீரலின் செயல்பாடுகளை மேம்படுத்தும் அர்த்த கடி சக்ராசனம்!
அர்த்த கடி சக்ராசனம். வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘கடி’ என்றால் ‘இடுப்பு’. இந்த ஆசனத்தில் இடுப்பைப் பக்கவாட்டில் வளைப்பதால் இந்தப் பெயர் பொருத்தமாகிறது. இது ஆங்கிலத்தில் Half Waist Wheel Pose என்று அழைக்கப்படுகிறது.
அர்த்த கடி சக்ராசனத்தில் இடுப்புப் பகுதி பலம் பெறுவதோடு இடுப்பில் உள்ள அதிக சதை கரைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தில் மூலாதார சக்கரமும் மணிப்பூரகமும் தூண்டப்படுகின்றன. மூலாதாரம் தூண்டப்படுவதால் அனைத்துச் சக்கரங்களின் செயல்பாடுகளும் ஊக்கம் பெறுகின்றன. மணிப்பூரகம் தூண்டப்படுவதால் பிரபஞ்ச ஆற்றல் ஈர்க்கப்படுகிறது. தன்மதிப்பு, தன்னம்பிக்கை பெருகுகிறது.
அர்த்த கடி சக்ராசனத்தின் பலன்கள்:
முதுகுத்தண்டுபக்கவாட்டில்வளைக்கப்பெறுகிறது,முதுகுத்தண்டின்நெகிழ்வுத்தன்மைஅதிகரிக்கிறது. நுரையீரல் பலப்படுத்தப்படுகிறது. இடுப்பின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது. அடிவயிற்று பகுதி பலம் பெறுகிறது. கல்லீரலின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
செய்முறை:
விரிப்பில் நேராக நிற்கவும்.மூச்சை உள்ளிழுத்தவாறே வலது கையை மேல் நோக்கி உயர்த்தவும். மூச்சை வெளியேற்றியவாறே இடது பக்கமாக இடுப்பை வளைக்கவும். இடுப்பை வளைக்கும் போது உயர்த்தப்பட்ட வலது கை காதை ஒட்டி இருக்க வேண்டும். கை விரல்கள் இடது புறம் நோக்கி இருக்க வேண்டும். நேராக பார்க்கவும்.20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், நேராக நின்று, பின் இடது கையை உயர்த்தி வலது பக்கமாக வளைந்து 20 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.
குறிப்பு:
முதுகுத்தண்டு மற்றும் இடுப்புப் பகுதியில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.