
கோவை வடவள்ளியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தைத் திமுக பொறியாளர் அணித் துணை அமைப்பாளர் சியாம் சுந்தர் தனது வீடாக மாற்றிக் குடும்பத்துடன் குடியிருந்து வருவதாகப் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரம்ப சுகாதார நிலையத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத் துணிச்சல் ஒரு சாதாரணத் திமுக நிர்வாகிக்கு வருமானால், அவரது பின்னணியில், திமுகவின் முக்கியத் தலைவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்குச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்ன பதில் கூறப் போகிறார்? என்று வினவியுள்ளார். உடனடியாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள திமுக நிர்வாகி சியாம் சுந்தர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்தக் கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.



