விஜய்க்கு 3-வது முறையாகச் சம்மன்..!

கரூர்க் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்குத் தொடர்பாகத் தில்லியில் நாளை விசாரணைக்கு ஆஜராகக் கூறித் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாள் கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி நாற்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் சிபிஐ புலனாய்வு செய்து வருகிறது.
இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஏற்கெனவே இருமுறை தில்லிக்குச் சென்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்குத் தொடர்பாகத் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மூன்றாம் முறையாக நாளை தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நாளை நேர்காணல் நடைபெற உள்ளது. இந்நிலையில் விஜயைத் தில்லிக்கு சிபிஐ விசாரணைக்கு அழைத்துச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *