கூட்டணியில் சுயமரியாதை சிக்கல் – ஜூன் 27-ல் அதிரடி முடிவு!

Advertisements

சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி ஒதுக்கீடு மற்றும் திமுகவின் அணுகுமுறை குறித்து தனது கடுமையான ஆதங்கத்தையும், தொண்டர்களின் கொந்தளிப்பையும் வெளிப்படையாகப் பதிவு செய்தார்.

காங்கிரஸ் மற்றும் விசிக ஆகிய கட்சிகளைப் போல மதிமுகவை ஒப்பிடக் கூடாது என்று சாடிய அவர், தேர்தல் களத்தில் மதிமுகவின் உழைப்புக்குக் கிடைத்த ஏமாற்றம் குறித்து விரிவாகப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சி, திமுகவிற்கு ஒரு நன்றிகூட சொல்லாமல், உடனடியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணிக்குச் சென்றுவிட்டது. ஆனால், நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து உறுதியாக நின்று, தேர்தல் களத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரமாகப் பணியாற்றினோம். குறிப்பாக, திமுகவிற்காக மட்டும் 34 தொகுதிகளில் நேரடியாக நான் தீவிரப் பிரசாரம் செய்து எங்களின் முழு உழைப்பையும் கொடுத்தோம்.”

“கூட்டணியில் உள்ள மற்ற அனைத்துக் கட்சிகளையும் விட எங்கள் கட்சிக்கு மிகக் குறைவான இடங்களை ஒதுக்கினர். அதுமட்டுமில்லாமல், தங்களின் சொந்தச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என திமுக பிடிவாதம் காட்டி நடந்து கொண்டது எங்கள் தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது. அதைத்தான் நேற்று துரை வைகோ வெளிப்படுத்தியிருந்தார்.”

“ஒரே ஒரு தொகுதியிலாவது மதிமுகவின் தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பதாக திமுக தலைமை முதலில் கூறியது. ஆனால், கடைசி நிமிடத்தில் அனைத்து இடங்களிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என நிர்ப்பந்தித்தனர். தங்களின் சொந்தக் கட்சியின் அடையாளத்தை விட்டுக்கொடுத்து, திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டது தொண்டர்கள் மத்தியில் பெரும் சுயமரியாதைச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.”

மேலும், “வருகிற ஜூன் 27 ஆம் தேதி மதிமுகவின் பொதுக்குழு கூடவுள்ளது. அதில் அனைத்து மாவட்ட, மாநில நிர்வாகிகளின் கருத்துகளும் கேட்கப்பட்டு, கட்சியின் எதிர்காலச் செயல்திட்டம் குறித்து மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும். இனிமேல் தேர்தல் வரும் பொழுதுதான் தேர்தல் கூட்டணியைப் பற்றி பேசுவோம்.”

சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்துள்ள சூழலில், திமுக கூட்டணியில் இருந்த வைகோவின் இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *