
கர்நாடகாவில் சிங்கம் போல வலம் வந்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2020-ல் பாஜகவில் இணைந்தார். தனது அனல் பறக்கும் பேச்சால் குறுகிய காலத்திலேயே தமிழக பாஜக தலைவரானார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கியை 11% ஆக உயர்த்திக் காட்டிய அண்ணாமலை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திடீரென தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார். அதிமுகவின் அழுத்தமே இதற்கு காரணம் எனச் சொல்லப்பட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பும் மறுக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை, தேர்தல் பிரச்சாரங்களில் ஒதுங்கியே இருந்தார். தேர்தலில் பாஜக 2% வாக்குடன் கடுமையான சரிவைச் சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக, அண்ணாமலை மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது, சென்னை விமான நிலையத்திற்கு பாஜக கொடி இல்லாத காரில் வந்தது என அடுத்தடுத்து பரபரப்பைக் கூட்டினார்.
இந்நிலையில், தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை, பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளன.
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்த அண்ணாமலை, தனது விலகல் கடிதத்தை அளித்துள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விலகல் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அண்ணாமலை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தான் ஏன் பாஜகவை விட்டு விலகுகிறேன் என்பது குறித்து அமித்ஷாவிடம் அவர் விரிவான விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக நிதின் நபினிடம் அண்ணாமலை அளித்த கடிதத்தில், தமிழக பாஜகவின் உட்கட்சி மோதல்கள், தன்னை ஓரங்கட்டிய பின்னணி மற்றும் 2026 தேர்தலில் பாஜக சந்தித்த தோல்விக்கான உண்மையான காரணங்கள் எனப் பல வெடிமுழக்க விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அண்ணாமலை சுமூகமான முறையில் கட்சியிலிருந்து வெளியேற விரும்புவதாகவும், இனி தனது சொந்த விருப்பப்படி அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போவதாகவும் தலைமையிடம் கூறிவிட்டார். இருப்பினும், அவரைத் தக்கவைக்க விரும்பும் பாஜக தலைமை, அவருக்குத் தேசிய அளவிலான முக்கியப் பொறுப்பு வழங்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை டெல்லியை விட்டுப் போக வேண்டாம் எனவும் அண்ணாமலைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசும்போது “2 நாட்களில் விரிவாகப் பேசுகிறேன்” என அண்ணாமலை கூறியிருந்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், அவர் தனிக்கட்சி தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.


