
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் உடல்நலம் பெற்று மக்கள் பணி தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ்ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாகத் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மார்பு சளி, இருமல் காரணமாகச் செயற்கை சுவாசக்கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றுள்ளார் என்றும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்தநிலையில், இன்று மதியம் மருத்துவமனை தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது அதில், விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை. அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என அதில் கூறப்பட்டது. இன்று 2-வது முறையாக விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், விஜயகாந்த் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார். விஜயகாந்துக்கு உள்ள சுவாச கோளாறுக்கு நிவாரணம் காணும் வகையில் டிரக்கியாஸ்டமி செய்வது குறித்து மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
டிரக்கியாஸ்டமி என்பது கழுத்தின் வெளிப்புறம் மூச்சுக்குழாயில் ஒரு சிறிய துவாரம் போட்டு, திறப்பை உருவாக்குவதன் மூலம் சுவாசத்தை சீராக்கும் மருத்துவ நடைமுறையாகும். அந்தத் துவாரத்தில் செருகப்பட்ட டிரக்கியாஸ்டமி குழாய்மூலம் சுவாசிக்க முடியும்.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் உடல்நலம் பெற்று மக்கள் பணி தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ்ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


