ஹவுதிகளுக்கு ஆயுதம் வழங்கும் ஈரான்.! ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்.!

இன்றைய சர்வதேச அரங்கில் மத்திய கிழக்கு நாடுகளின் புவிசார் அரசியல் சூழல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஏமன் உள்நாட்டுப் போர் மற்றும் சவுதி அரேபியாவுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நிலவி வரும் மோதல்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன.இந்த விவகாரத்தில் சவுதி அரேபியாவின் எப்-15 போர் விமானம் வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் தகவல்,
மெக்கா நகரின் பாதுகாப்பு குறித்த பாகிஸ்தானின் எச்சரிக்கை மற்றும் இருதரப்பு மோதலில் உயிர்ப்பலி போன்ற மூன்று முக்கியச் செய்திகள் குறித்தும் , மேலும் ஹவுதிகள் எடுக்கும் முடிவுகள் முற்றிலும் அவர்களது சுதந்திரமான சொந்த முடிவுகள் மட்டுமே என்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகள் நடத்தும் தாக்குதலுக்கு ஈரான் ஒருபோதும் பொறுப்பேற்காது என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெளிவுபடுத்தியுள்ளார்.இது குறித்த பின்னணி தகவல்கள் குறித்து தற்பொழுது விரிவாக பார்க்கலாம்
ஏமனில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தற்போது சவுதி அரேபியாவுக்கு எதிராகத் தீவிரமான வான்வெளித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏமனின் மரீப் மாகாணத்தின் வான்பரப்பில், சவுதி ஆதரவு படைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்ட சவுதி அரேபியாவின் எப்-15 ரக போர் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படையினர் தெரிவித்துள்ளனர்.

தங்களது சொந்தத் தயாரிப்பான வான்-வழி ஏவுகணையைப் பயன்படுத்தி இந்த விமானத்தை வீழ்த்தியதாகக் கூறியுள்ள ஹவுதிகள், அது தொடர்பான 4 நிமிடக் காணொளியையும் வெளியிட்டுள்ளனர். அதில் விமானம் தீப்பற்றி எரிவது மற்றும் பாலைவனப் பகுதியில் அதன் கருகிய சிதைந்த பாகங்கள் கிடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விமானத்தில் சவுதி கொடியின் அடையாளங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹவுதிகள் இந்தப் பரபரப்பான காணொளியை வெளியிட்டிருந்தாலும், சவுதி அரேபியா தரப்பில் இதுவரை இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வழங்கப்படவில்லை. ஏமனில் அரசுப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குச் சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் மறைமுகமாக ஆதரவளித்து வருகின்றன.
அமெரிக்கா – ஈரான் மோதல்களின் எதிரொலியாக, ஹவுதிகள் சவுதி அரேபியா மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதற்குப் பதிலடியாகச் சவுதி தலைமையிலான கூட்டுப்படைகளும் ஏமனில் உள்ள ஹவுதி நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமீபத்தில் சவுதி அரேபியாவின் தென்கிழக்கே அமைந்துள்ள தைப் நகர் மீது ஹவுதிகள் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார், இருவர் படுகாயமடைந்தனர்.
மறுபுறம், ஏமனில் உள்ள ஹவுதி கட்டுப்பாட்டுப் பகுதியான தைஸ் நகர் மீது சவுதி நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் தொடர் தாக்குதல்களால் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த மோதல்கள் ஒருபுறம் இருக்க, இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவின் பாதுகாப்பு குறித்த விவகாரம் தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
சவுதியில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானத்தை ஏவி தாக்குதல் நடத்த முயன்றதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியது. மேலும், அந்தத் டிரோனைத் தாங்கள் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி தரப்பு தெரிவித்தது. இந்தத் குற்றச்சாட்டை ஹவுதி அமைப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது. சவுதி அரேபியா பழைய பொய்களைப் பரப்பி வருவதாகக் கூறிய அவர்கள், இஸ்லாத்தின் மிக முக்கியமான புனிதத் தளத்தைக் குறிவைப்பது பற்றி தங்கள் குழு நினைத்துக்கூடப் பார்க்காது என்று விளக்கம் அளித்தனர்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்குப் பாகிஸ்தான் முழு ஆதரவையும் அளித்து, எப்போதும் தோளோடு தோள் நிற்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்ற பாகிஸ்தான் முழுமையாகத் தயாராக உள்ளது என்றும், மெக்கா தாக்கப்பட்டால் அதைப் பாதுகாக்க எங்களுக்கு எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை என்றும் கூறினார்.

இதற்கிடையே, சவுதி மீதான தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் கவலை தெரிவித்துள்ளார். ஏமன் விவகாரங்களில் ஈரான் தலையிடுவதில்லை என்றும், ஹவுதிகள் எடுக்கும் முடிவுகள் முற்றிலும் அவர்களது சுதந்திரமான சொந்த முடிவுகள் மட்டுமே என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெளிவுபடுத்தியுள்ளார்.

ஏமன் விவகாரங்களில் ஈரானுக்கும் –  ஹவுதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஈரான் விளக்கம் அளித்துத் தற்காத்துக் கொண்டாலும், சவுதி மீதான நேரடித் தாக்குதல்களும், மெக்காவின் பாதுகாப்பு குறித்த பாகிஸ்தானின் நேரடி எச்சரிக்கையும் மத்திய கிழக்கு அரசியலில் பெரும் தீப்பொறியைப் பற்றவைத்துள்ளன. இந்த விவகாரங்கள் அடுத்தடுத்து என்ன மாதிரியான தாக்கங்களை உருவாக்கப் போகிறது மேலும், பிராந்தியம் ஒரு முழுமையான போரை நோக்கி நகர்கிறதா என்ற பதற்றமான கேள்விக்கு விடை தேடி உலக நாடுகள் அனைத்தும் இந்த நிகழ்வுகளைக் கவலையுடன் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *