
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று பழமொழிதானேயென நாம் இருப்போம் அது தான் இல்லை. சோறு கொண்டு அலங்கரிக்கப்படும் சிவனைக் கண்டால் சொர்க்கம் நிச்சயம் என்பதே அதன் பொருள்.
ஐப்பசி பவுர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வரும் நிகழ்ச்சி!
உணவில்லையேல் உயிரில்லை. உணவே உலகில் பிரதானம். உணவு பரப்பிரம்மம். எண் ஜான் உடம்பில் ஒரு ஜான் வயிறு நம்மை வளர்ச்சி செயல் அனைத்திற்கும் மூல காரணமாக அமைகிறது. வாழ்க்கையில் முக்கியத் தேவைகளில் உணவுக்கே முதலிடம். பசி என்ற உணர்வு நமக்கு இயற்கை அளித்த வரம் என்றே கூறலாம்.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும். என்பதிலிருந்தே சாப்பாட்டின் அருமை விளங்கிறது. தானத்தில் சிறந்தது அன்னதானம் தான், அன்னம் என்றால் உணவு. எந்த ஒரு நல்ல நிகழ்ச்சிகளிலும் முதலில் உணவு பரிமாறி மகிழ்வர். திருமண வைபவம் முதல் அனைத்து நல்ல காரியங்களிலும் விருந்து வைத்து வயிறார சாப்பிட வைப்பர்.

உணவின் அவசியத்தையும் அதை நாம் போற்ற வேண்டியும் ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியன்று சிவாலயங்களில் சிவ பெருமானுக்கு அன்னத்தால் அலங்கரித்து அன்ன அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். காய் கறிகள், பழங்கள், பயறு வகைகள் என அனைத்தும் இறைவனுக்கு படையலிட்டு மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சாப்பாட்டை வழிபடுதலின் பொருட்டு அதற்குரிய நாளாக ஐப்பசி மாத பௌர்ணமி தினம் கருதப்படுகிறது. இன்று சிவாலயங்களில் நடைபெறும் அன்னாபிஷேகத்தை தரிசிப்பதன் பலன்கள் எண்ணிலடங்காதவை.
ஐப்பசி மாதப் பௌர்ணமி, சிவபெருமான் வழிபாட்டுக்கு உகந்தது. இந்த நாளில் அமிர்த கலை கொண்டு பூர்ண சந்திரன் வெள்ளொளி பொழியும் வேளையில் சிவபெருமானின் லிங்க ரூபத்துக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். பொதுவாக, அன்னத்தை நிவேதனம் செய்ததோடு சரி. அதைச் சுவாமியின் திருமேனியில் பட அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால், இந்த ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் சுவாமிக்கு அன்னத்தாலேயே அபிஷேகம் செய்து வழிபடுவர். சுவாமியின் திருமேனி எங்கும் அன்னம் கொண்டு சந்தனக் காப்பிடுவதுபோலக் காப்பிட்டு அலங்கரிப்பர். அப்போது சுவாமியைத் தரிசித்து வழிபடுவதன் மூலம் நம் வாழ்நாள் முழுவதும் அன்னத்துக்குக் குறைவில்லாத ஒரு வாழ்வை ஈசன் நமக்கு அருள்வார் என்பது ஐதிகம்.
இந்த உலகம் அன்னமயமானது. நாம் அன்றாடம் உண்ணும் அன்னம் பஞ்சபூதங்களின் அருளால் உருவானது. பூமி நெல்லைத் தந்தது. காற்றும் மழையும் அந்த நெல்லை வளர்த்தெடுத்தது. நெருப்பு அதை உண்ணும் உணவாக்கியது. இப்படிப் பஞ்சபூதங்களால் ஆன உணவை, பஞ்சபூதங்களால் ஆன இந்த மனித உடல் உண்டு தன் உயிரைப் பெருக்கிக்கொள்கிறது. அதற்கு நன்றிக் கடனாக ஒருநாள் நாம் ஈசனுக்கு அன்னத்தாலேயே அபிஷேகம் செய்து வழிபடுவது என்று நம் பெரியோர்கள் நிச்சயித்தனர்.

அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்தால் பிறவிப்பிணி தீரும் என்பது ஐதிகம். பெரியவர்கள் ‘சாதம் போதும், சோறு கொடு’ என்று சொல்வதுண்டு. சாதம் என்ற சொல்லைத் தவிர்த்து அழகிய தமிழில் சோறு எனும் சொல் பொருள் விளங்கினாலும் இதன் உண்மைப் பொருளை பெரியவர்கள் கூறும்போது,
“`சாதம்’ என்ற சொல்லுக்குப் `பிறப்பு’ என்பது பொருள்; `சோறு’ என்ற சொல்லுக்கு `முக்தி’ என்பது பொருள். இதன்படி சாதத்தைப்படைத்து, சோற்றை – அதாவது முக்தியை வேண்டுவதே அன்னாபிஷேக வைபவம். அதையே ‘சாதம் போதும் சோறு கொடு’ என்று சொல்வது வழக்கம்” என்பர். சிதம்பரத்தில் தினமும் பகல்வேளையில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவதும் இன்று வரை நிகழ்கிறது.
இத்தகைய சிறப்புமிக்க அன்னாபிஷேகம், ஐப்பசி பௌர்ணமியையொட்டி 28.10.23 அன்று காலை 4.17 மணிக்கு தொடங்குகிறது.29.10.23 அன்று அதிகாலை 1.47 மணிக்கு முடியும். பொதுவாகவே பவுர்ணமியன்று அறிவியல் படி நல்லது. இந்நேரத்தில் நாம் பவுர்ணமி ஒளியில் இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணிலடங்கா நன்மைகள் உண்டு. அதை கருத்தில் கொண்டே நம் முன்னோரகள் பவுர்ணமியில் கோவில் சுற்றி வர கிரிவலம் எனும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.
அறிவியலும் ஆன்மீகமும் பின்னிப் பிணைந்தது. ஒவ்வொன்றும் காரண காரியத்தோடு செய்யப்பட்டு வருகிறது.
இன்றும் பல சிவாலயங்களில் மாலை அன்னாபிஷேக தரிசனம் காணலாம். மாலை தொடங்கி விடியற் காலை வரை 5 கால பூஜைகள் நடைபெறும். சிவடையார்கள் சிவாலயங்களில் இரவு தங்கி திருமுறைகள் ஓதுவர். சிவபுராணம் படிப்பர். அன்னாபிஷேகம் காண்போம். அவன் அருளைப் பெறுவோம்.

