Puthira Kamaeshwarar Temple: தசரத மன்னர் ராமர், லட்சுமணர் பிறக்க வழிபட்ட ஸ்தலம்!

Advertisements

தசரத மன்னர் ராமர், லட்சுமணர் பிறக்க வழிபட்ட ஸ்தலம் புத்திர காமேஸ்வரர் கோவில்.

குழலினிது யாழினிது என்பர் அவர்தம் மழலைச் சொல் கேளாதார்’ உலகிலேயே மிகப் பெரிய சொத்து எது என மக்களைக் கேட்டால் மக்கட்பேறு என்று தான் கூறுவார்கள். நாம் ஒருவரைப் பார்த்தால் எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று தான் கேட்பார்களே தவிர எவ்வளவு சொத்து உள்ளது என்று கேட்க மாட்டார்கள். மழலைச் செல்வம் தான் உலகிலேயே மிக உயர்ந்த செல்வம்.

சந்தான பாக்கியம், குழந்தை பாக்கியம் மக்கட்பேறு என்றெல்லாம் கூறுவர். குழந்தை குட்டி உண்டா? புழு பூச்சி உண்டா ? என்று  சொல் வழக்கு தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆனால் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கிறதா என்றால் அது தான் இல்லை. அந்த காலத்தில் இருந்தே ஒரு சில தம்பதியினர் மட்டுமல்ல அரச குலத்திற்கே கூட இந்த பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இப்போது தான் மருத்துவமனை நாடுகிறார்கள் மக்கள். அறிவியல் வளர்ச்சியில் செயற்கை கருத்தரிப்பு, குழாய் குழந்தை  வாடகைத்தாய் என எப்படியெல்லாமோ வசதிகள் வந்துவிட்டது. ஆனால் அறிவியல் வளர்ச்சி குறைந்திருந்த அந்த காலத்தில் மக்கள் ஆன்மீக வழியில் குழந்தை பாக்கியம் வேண்டி கோவில் கோவிலாக சுற்றுவர். இறைவன் அருளால் குழந்தைப் பேறு கிடைக்க பெற்றவர்கள் ஏராளம்.

அப்படியாக தசரத மகா சக்கரவர்த்தி  திருமணமாகி குழந்தை இல்லாமல் புத்திர காமேஸ்வரரை வழிபட்டார் . அதன் பிறகே ராமபிரான் அவதரித்தார் என்பது வரலாறு. தசரத மன்னர் இக்கோவிலுக்கு வந்து இங்கு உள்ள லிங்கேஸ்வரரை வழிபட்ட பிறகு தான் ராமர், லட்சுமணர் பிறந்தார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் இறைவனுக்கு புத்திர காமேஸ்வரர் என்ற பெயர் உருவானது. கோவில் முகப்பிலேயே  தசரதருக்கு ஒரு சிறு சன்னிதியும் இருக்கிறது. இவரை வணங்கி விட்டுத் தான் கோவில் உள்ளே செல்வார்கள். ஆற்றின் கரையோரம் அமைந்திருப்பதால் ஆற்று நீர் ஒரு பக்கம் சலசல என ஓடிக் கொண்டிருக்க தென்னை கமுகு மரங்கள் அழகு சேர்க்க லிங்க மரமும் குருவிகள் கீச்சிடும் சத்தமும் மனதுக்கு ரம்மியமாக இருக்கும்.

இந்த ஆலயம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ளது. கமண்டல நாக நதிக்கரை ஓரம் அமைந்திருக்கும் அருள்மிகு புத்திர காமேஸ்வரர் பற்றி பார்க்கலாம். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பட்டு புகழ் பெற்றது. அதே போல் இந்த புத்திர காமேஸ்வரர் கோவில் புகழ் பெற்றது. சமதக்கினி முனிவரின் கமண்டலம் வழிந்து பெருகி இந்த நாக ஆறு உருவாகியது என்று கூறுவார்கள். இதனால் இந்த ஆற்றுக்கு “கமண்டல நாக நதி” என்ற பெயரும் உண்டு.

பாம்பு போல வளைந்து போவதால் “நாகநதி” என்ற பெயர் உருவானது. இந்தக் கோவில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது என வரலாறு கூறுகிறது. இங்கு ஏராளமான கல்வெட்டுகள் இருக்கிறது. படித்துறைகளின் இரு புறமும்  முழு முதற் கடவுள் விநாயகர்  ராம பக்தர் ஸ்ரீ ஆஞ்சநேயரும் வீற்றிருப்பர்.

குழந்தை பேறு கிடைக்க பெண்கள் தொடர்ந்து ஐந்து திங்கட்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும். ஆறாவது திங்களன்று காலையில் எதுவும் சாப்பிடாமல் கோவிலுக்கு வர வேண்டும். முதலில் ஆற்றில் குளித்து பிறகு அருகில் உள்ள நாகர் சிலைகளை வணங்கி விட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும். இதனால் நாக தோஷம் தீரும் என்பது ஐதீகம்.


இந்த புத்திர காமேஸ்வரர் கோவிலில் வில்வ மரம் இருக்கிறது. அந்த மரத்தில் பறித்த வில்வ இலைகளை கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. இக்கோவிலில் வழிபட்டு குழந்தை செல்வம் பெற்ற தம்பதிகள் இங்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவதை தினந்தோறும் பார்க்க முடியும்.

காணும் பொங்கல் அன்று சிறப்பான திருவிழா நடக்கிறது. இதில் ஏராளமான மக்கள் கூடுவார்கள். சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம், திருக்கல்யாணம் போன்ற விழாக்கள் புத்திர காமேஸ்வரர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திங்கட்கிழமையும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் இங்குள்ள நாகத்தை வழிபடுவது சிறப்பு. கார்த்திகை மாதங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கார்த்திகை சோமவாரம் என்று கூட்டம் இறைவனை தரிசிக்க வருவர். மேலும் 1008 சங்காபிஷேகம், ஆண்டுக்கு ஒரு முறை யாகங்கள் நடைபெறுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்த யாகத்தில் கலந்து கொண்டு குழந்தை பாக்கியம் பெற்றவர்களும் உண்டு. இன்றும் யாகங்கள் நடைபெறுகிறது.

புத்திர காமேஸ்வரர் ஆலயத்தின் இடதுபுறம் சப்த மாதாக்கள் சிலைகள்  உண்டு. பிராம்மி, மகேஸ்வரி,வைஷ்ணவி, வாராகி, இந்திராணி,கௌமாரி ,சாமுண்டீஸ்வரி ஆகியோரை வழிபடுவது நல்ல பலனைத் தரும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான கோவில் என்பதால் இக் கோவில் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *