Kottai Mariamman Temple: 30 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு!

Advertisements

30 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!

சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் சேலத்தில் உள்ளது.  சேலம் மாவட்ட மக்களால் காவல் தெய்வமாக வழிபட்டு வரும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் கருவறை சிறியதாகவும், சேதமடைந்தும் காணப்பட்டதால் இந்த கோயிலை புனரமைத்து தரவேண்டும் என சேலம் மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் தமிழ்நாடு அரசு கோவில் திருப்பணிகளுக்கு ரூ.4.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.  இதையடுத்து கோயில் திருப்பணிகள் கடந்த 2016 -ஆம் ஆண்டு தொடங்கியது. கோயில் வளாகத்தில் ஆகம விதிகளின்படி பழமை மாறாமல் புதிதாக பல்வேறு அழகிய சிற்பங்களுடன் கூடிய கருவறை கட்டப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குடமுழுக்கு விழா, கடந்த அக். 18-ஆம் தேதி கணபதி ஹோமம், முளைப்பாலிகை இடுதலுடன் தொடங்கியது.  புதன்கிழமை கணபதி வழிபாடு, சங்கல்பம், புண்யாகவஜனம், அக்னி சங்கரணம், சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட யாக சாலைகளில் 23 யாக குண்டம் மற்றும் 16 கலசங்கள் வைக்கப்பட்டு அா்ச்சகா்கள் வேத, மந்திரங்களை முழங்க முதற்கால வேள்வி வழிபாடு தொடங்கியது.


இதனிடையே வியாழக்கிழமை காலை இரண்டாம் கால வேள்வி வழிபாடு மற்றும் ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசங்கள் பொருத்துதல், மூலவா் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மூன்றாம் கால வேள்வி வழிபாடு நடைபெற்றது.

மேலும், கோட்டை மாரியம்மனுக்கு,  அண்ணனாக விளங்கக்கூடிய அழகிரிநாதா் கோயிலில் இருந்து மாரியம்மன் கோயிலுக்கு 108 வகையான சீா் வரிசை பொருள்கள் கொண்டு வரப்பட்டன.

தொடா்ந்து இன்று  அதிகாலை 4.30 மணிமுதல் காலை 7.30 மணி வரை நான்காம் கால வேள்வி வழிபாடு, காலை 7.40 மணி முதல் காலை 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னிதி விமானம் மற்றும் கொடிமரத்துக்கு சமகாலத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

தொடா்ந்து காலை 8.30 மணி முதல் மகா கணபதி, பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சுவாமிகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து குடமுழுக்கு விழா நடைபெறும்போது கோபுரத்தின் மீது ஊற்றப்பட்ட புனிததீர்த்தம் மோட்டார் மூலம் பக்தர் மீது தெளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து காலை 10 மணிக்கு மூலவா் சுவாமிக்கு மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம் போன்ற பல்வேறு வைபங்களும் நடைபெற்றது.

விழாவில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு,  ஆட்சியா் செ.காா்மேகம், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், துறையூா் ஆதீனம் வேலாயுத சிவப்பிரகாச பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடமுழக்கு விழா நடைபெற்றதால் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு கோபுர தரிசனம் பெற்றனர்.இதனிடையே பக்தர்களின் வசதிக்காக சேலம் மாவட்ட நிர்வாகம் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்தது.

குடமுழுக்கு விழாவையொட்டி, சுமாா் 1200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்;  வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருக்கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  குடமுழுக்கின் போது கூட்டநெரிசலை தவிப்பதற்காக திருக்கோவில் சுற்றி நான்கு இடங்களில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *