உடையப் போகுது அதிமுக? ஒரே காரில் சிவி சண்முகம் – எஸ்பி வேலுமணி.!

Advertisements
அதிமுக உடைய போகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் தொடர்ந்து சிவி சண்முகத்தை சந்தித்து வருகின்றனர். ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, கே சி கருப்பன்னனுடன் சிபி சண்முகம் காரில் தனியாக கிளம்பி சென்றிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. அதிமுக மீண்டும் உடைந்துவிடுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. அதற்கு காரணமாக கட்சிக்குள் எடப்பாடி மீது தொடர்ந்து நிலவும் அதிருப்தி மற்றும் சமீபத்திய சட்டசபை தோல்வி ஆகியவை பார்க்கப்படுகின்றன.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சில எம்எல்ஏக்கள் தொடர்ந்து சி.வி. சண்முகத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஒரு ஆலோசனைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் சி.வி. சண்முகத்துடன் ஒரே காரில் தனியாக சென்றதாக கூறப்படுவது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. கட்சியின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள் கட்சிக்குள் அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுக, எதிர்க்கட்சித் அந்தஸ்தையும் இழந்துள்ளது.
இது கட்சியின் கட்டமைப்பை மேலும் பாதித்துள்ளது. இதனால், சில எம்எல்ஏக்கள் அதிருப்தி கோஷ்டியாக உருவாகியுள்ளனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்களை திரட்ட முயற்சித்து வரும் சூழலில், அதிமுகவின் ஒரு பகுதி எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர் என்ற தகவல்கள் பரவியுள்ளன.
குறிப்பாக, சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு அணியாக திரள்கிறார்கள் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது..இந்த சூழலில், அதிமுக நடத்த இருந்த முக்கிய ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதும் சந்தேகங்களை அதிகரித்துள்ளது. கட்சிக்குள் கருத்து வேறுபாடு தீவிரமடைந்ததால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு தரப்பினர், “திமுக எதிர்ப்பு” என்ற அடிப்படையில் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
மற்றொரு தரப்பினர், அப்படி செய்தால் கட்சியின் தனித்துவம் பாதிக்கப்படும் என்பதால் ஆதரவு அளிக்கக் கூடாது என சொல்கின்றனர். இந்த இரண்டு நிலைப்பாடுகளும் கட்சிக்குள் வெளிப்படையாக மோதலை உருவாக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்களுடன் ஏற்பட்ட பிரிவினை காரணமாக கட்சி பலவீனமடைந்த நிலையில், மீண்டும் பிரிவு ஏற்படும் வாய்ப்பு குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதிமுகவின் தற்போதைய நிலைமை மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் எழுச்சி ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, அதிமுகவில் முரண்பாடுகள் மற்றொரு பக்கம் அதிகரித்து வருவதால் எடப்பாடிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *