தமிழகத்தின் ‘லக்கி’ தொகுதி எது தெரியுமா.? இதில் வென்றால் கோட்டை உறுதி.!

Advertisements
வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் குடியாத்தம் தொகுதியும் ஒன்றாகும். சுதந்திர இந்தியாவில் 1947-ம் ஆண்டு முதன்முதலாக டெல்லி செங்கோட்டையில் கம்பீரமாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி குடியாத்தம் பகுதியில் தான் நெய்யப்பட்டது. அதேபோல் கல்விக்குக் கண் தந்த  கர்மவீரர் காமராஜரை முதலமைச்சராக்கியது தொகுதி என்ற பெருமையும் குடியாத்தத்திற்கு உள்ளது.

1954-ம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்று முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார். இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்பது அரை நூற்றாண்டுக்கு மேலாக தொடரும் வரலாற்று நிகழ்வாக உள்ளது.
தற்போதைய இந்தச் சட்டமன்ற தேர்தலிலும் அந்த வரலாற்றுச் சிறப்பு தொடர்ந்து வருகிறது.

கடந்த 1952-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் 1954-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் கட்சியே ஆட்சி புரிந்தது.1957-ம் ஆண்டு  குடியாத்தம் தொகுதியில் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த V.K.கோதண்டராமன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியை தழுவினார். என்றாலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நீடித்தது.

அதைத் தொடர்ந்து 1962-ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர்  மணவாளனும் 1967-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வி.கே.கோதண்டராமன், 1971-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட துரைசாமி வெற்றி பெற்றனர். 1977-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வி.கே.கோதண்டராமன் 3-வது முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.

அப்போது எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தது.. 1980-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கே.ஆர்.சுந்தரமும், 1984-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.கோவிந்தசாமியும், தி.மு.க. கூட்டணியில் 1989-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் கே.ஆர்.சுந்தரமும், 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வி.தண்டாயுதபாணியும்,

1996-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் வி.ஜி.தனபால், 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளர் சி.எம்.சூரியகலா, 2006-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஜி.லதா, 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் கே.லிங்கமுத்து, 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளர் சி.ஜெயந்தி பத்மநாபன், 2021-ம் ஆண்டு தி.மு.க.வேட்பாளர் வி.அமலுவிஜயன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

தற்போதைய சட்டமன்ற தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட சிந்து, தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் பிரதாப்பை 10 ஆயிரத்து 097 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தமிழ்நாட்டில் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பொறுப்பேற்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

1962-ம் ஆண்டு தேர்தல் முதல் 2026-ம் ஆண்டு வரையிலான 64 ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர் சார்ந்த கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்ற வரலாறு நீடிப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *