
பெரம்பலூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் தேர்வு முடிந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். பள்ளி ஆசிரியர்களும் இருபதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நேற்று இரவு 9 மணி அளவில் திருத்தணியில் இருந்து வேனில் புறப்பட்டுள்ளனர்.
இந்த வேன் இன்று அதிகாலை சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு பாதையில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியின் பின்பகுதியில் மோதிச் சாலையில் கவிழ்ந்தது.
இதில் வேன் ஓட்டுநர் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த வெங்கட் என்பவருக்கும், திருத்தணியைச் சேர்ந்த மாணவன் பாலமுருகனுக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் 12 மாணவர்கள் இலேசான காயமடைந்தனர். 14 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தினால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த பெரம்பலூர் காவல்துறையினர் விரைந்து சென்று சாலையில் கவிழ்ந்த வாகனத்தை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர் செய்தனர். விபத்துக் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


