BLM நிறுவனர் வீடுகளில் ED ரெய்டு!

கூட்டுறவுச் சங்கத்தின் வைப்புநிதி ஐயாயிரம் கோடி  ரூபாய் மோசடி செய்தது தொடர்பாகச் சென்னையிலும் கேரளத்திலும் பிஎல்எம் நிறுவனர் பிரேம்குமாருக்குச் சொந்தமான 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  அதிரடிச்  சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பாரத் லஜ்னா பன்மாநிலக் கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கம் சென்னை அண்ணாநகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனம் கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. கேரளத்தில் மட்டும் 146 இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் முதன்மையான 33 நகரங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. இதேபோல் புதுச்சேரியிலும் கிளைகள் உள்ளன.

இந்த நிறுவனம் இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் திரட்டிய வைப்புத் தொகையில் நிலங்களை வாங்கி உறுப்பினர்களுக்கும் மற்றவர்களுக்கும் விற்பனை செய்கிறது. இவ்வாறு வாடிக்கையாளர்களிடம் திரட்டிய  ஐயாயிரம் கோடி ரூபாயை அதன் நிறுவனரும் தலைவருமான பிரேம் குமார் தனது மனைவி, உறவினர்கள் கணக்குக்கு மாற்றிவிட்டதாகவும், சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சங்கத்துக்குச் சொந்தமான ராகம் தியேட்டரை பிரையோஸ் பின்வெஸ்ட் நிறுவனத்திடம் அடகு வைத்துப் பெற்ற பணத்தையும் கையாடல் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மோசடி செய்துள்ள பணத்தில் காஞ்சிபுரத்தில் அவர் மனைவி பெயரில் 500 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை அண்ணாநகரில் உள்ள பிஎல்எம் நிறுவனத் தலைமையகம், கேரளத்தின் பல்வேறு நகரங்கள் என மொத்தம் 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாகக் கேரளக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் அக்டோபர் இறுதியில் பிரேம்குமாரைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *