
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம்மூலம் கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியைப் பூமி பூஜையுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை அடுத்த மெய்யூர் கிராமம் அருகே முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம்மூலம் கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக ரூபாய் 121 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியைப் பூமி பூஜையுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் தமிழகத்தில் 8,200 கிலோமீட்டர் தமிழக அரசு இரு வழி சாலையாக மாற்ற வேண்டும் என்று ஆணையிட்டார். அதன் அடிப்படையில் எங்கெங்கெல்லாம் போக்குவரத்து அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் இருவழிப்பாதையாகவும் மற்றும் இருவழிப் பாதை சாலையை நான்கு வழி பாதை சாலையாகவும் மாற்றவும் அறிவுறுத்தியுள்ளார். கடந்த வருடம் திருவண்ணாமலை முதல் தர்மபுரி வரை உள்ள சாலையை நான்கு வழி சாலையாக மேம்படுத்தப்பட்டது இந்த வருடம் திருவண்ணாமலையிலிருந்து கள்ளக்குறிச்சி வரை உள்ள சாலையை இரண்டு வழி பாதையிலிருந்து நான்கு வழி பாதையாக மாற்ற இன்று ரூபாய் 121 கோடி மதிப்பில் பூமி பூஜை பணியைத் தொடங்கி வைத்துள்ளேன். மேலும் இந்தப் பணியை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், கூடுதல் ஆட்சியர் ரிஷப், மாநில தடகள சங்க துணை தலைவர் கம்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.



