
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க மறுத்து கடந்த 5 நாட்களாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கொலை செய்த சுர்ஜித் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணனை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், கவினின் உறவினர்கள் அவரது உடலை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். 27 வயதான இவரது மகன் கவினும், நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த சுபாஷினியும் பள்ளிப் பருவத்தில் இருந்தே பழகி வந்துள்ளனர். இவர்களது இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. திருமணத்தில் முடிய இருந்த இவர்களது காதல் கடைசியாக கொலையில் முடிந்துள்ளது.
ஐடி ஊழியரான கவின் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். கடந்த மாதம் 27 ஆம் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக சுபாஷினி பணிபுரியும் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த சுபாஷினியின் தம்பி சுர்ஜித், கவினுடன் பேச வேண்டும் என்று அவரை அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் சுர்ஜித் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சுர்ஜித்தின் தந்தை மற்றும் தாயாரை கைது செய்தால் மட்டுமே கவின் உடலைப் பெறுவோம் எனக் கூறி கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்குவோம் என்று கூறி கவினின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. போலீஸாரால் தேடப்பட்டு வந்த சுர்ஜித்தின் தந்தை உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்குப் பிறகு கவினின் உடலை வாங்க அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து முதல் பொதுமக்களில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் கவின் உடல் பின்னர் நல்லடக்கம் செய்யப்படுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.



