Bridge Collapses In Gujarat : குஜராத்தின் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழப்பு!

Advertisements

குஜராத்தின் வதோதரா – ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் பத்துப் பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்த நிலையில் மகிசாகர் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் பாலத்தின் பெரும்பகுதி இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் பாலத்தின் மீது சென்ற ஒரு லாரியும், சில வாகனங்களும், சில இருசக்கர வாகனங்களும் ஆற்றுக்குள் விழுந்தன.
தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை அவர்கள் மீட்டனர்.
ஆனந்த், வதோதரா ஆகிய இரு மாவட்டங்களின் ஆட்சியர்களும் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது பேசிய ஆனந்த் மாவட்ட ஆட்சியர் பிரவீன் சவுத்ரி பாதி இடிந்த பாலத்தின் விளிம்பில் நிற்கும் மற்றொரு லாரி ஆற்றுக்குள் விழுந்துவிடாமல் இருக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகத் தெரிவித்தார்.

வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா, இடிபாடுகளில் சிக்கியவர்களையும் ஆற்றில் விழுந்தவர்களையும் மீட்கும் முயற்சியில் மாநகராட்சி, தீயணைப்பு மீட்புப் படை, தேசியப் பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மருத்துவமனையில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருவதாக வதோதரா மருத்துவமனையின் அதிகாரி ராகுல் சிங் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *