
திமுகவின் ஆட்சி ஆன்மீக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற ஆட்சியாக உள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் கோவில் குடமுழுக்கு விழா வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 114 கோவில்களுக்குக் குடமுழுக்கு நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்தார். திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் கூடியிருந்த போதும் ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நிகழவில்லை என்று தெரிவித்தார்.
பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் என மூன்று படைவீடுகளில் குடமுழுக்கு நடத்தித் தமிழ் கடவுள் முருகனுக்குப் பெருமை சேர்க்கின்ற ஆட்சி திமுக ஆட்சி என அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டார்.



