
Imran Khan | Pakistan
சிறையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் விசாரணை…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம், ரகசிய ஆவணங்களைக் கசியவிட்டது தொடர்பான வழக்கில், அந்த நாட்டு புலனாய்வு அமைப்பினர், ஒரு மணி நேரத்துக்கு மேலாக நேற்று விசாரணை நடத்தினர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான, இம்ரான் கான் பிரதமராகப் பதவி வகித்தார். இவர் ஆட்சிமீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு அவர் விலகினார்.
பிரதமராக இருந்தபோது வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசுகளை, அரசு கருவூலத்தில் சேர்க்காமல், அவற்றை விற்று சொத்து சேர்த்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
Imran Khan | Pakistan
இதையடுத்து, தற்போது அங்குள்ள அட்டாக் சிறையில் உள்ளார். அவர்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், புதிய வழக்காக, அரசின் ரகசிய ஆவணங்களைக் கசியவிட்டதாகப் புகார் எழுந்தது. தனது அரசைக் கவிழ்த்ததில் அமெரிக்காவுக்கு சதி இருப்பதாக இம்ரான் குற்றஞ்சாட்டினார்.
ஆனால், இதை அமெரிக்காவும், பாகிஸ்தான் ராணுவமும் மறுத்து வந்த நிலையில், அந்த ஆவணத்தைப் பொது இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, சிறையில் உள்ள இம்ரானிடம் புலனாய்வு அமைப்பினர் நேற்று விசாரணை நடத்தினர்.அவரிடம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ‘பொது கூட்டத்தில் காட்டப்பட்டது அமைச்சரவையின் கூட்ட விபரங்கள் தான்; அது ரகசிய ஆவணம் அல்ல’ என அவர் தெரிவித்தார்.


