
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் இன்னும் மழை வெள்ளபாதிப்பில் இருந்து மீளாமல் உள்ளது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவுப்படி நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகள், மற்றும் வெள்ள நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
திருவள்ளுர் மாவட்டத்தில் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, நசரத்பேட்டை, திருமழிசை, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழைநீர் இன்னும் வடியவில்லை.

பழவேற்காடு ஆண்டார்மடம், தாங்கள் பெரும்புலம் , எடமணி, வைரங்குப்பம், நக்கத் துறவு, கோரை குப்பம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றிலும் மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் படகில் சென்று வருகின்றனர். இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. சாலை முழுவதிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.
பலத்த காற்று காரணமாக பழவேற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் மின்கம்பங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதனால் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5-வது நாளாக இன்றும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.இதேபோல் மழைவெள்ளம் காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.

இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பத்தாயிரம் ஷெக்டர் விளை நிலங்களை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளருடன் பேசிய அவர்.
ஆரணி ஆற்றிற்கு குழுக்களை அமைத்து கறைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏக்கர் ஒன்றுக்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இடுப்பொருள் இழப்பீடாக 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் பயிர் காப்பீடு செய்துள்ளவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் புயல் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்துக் காட்டுவதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய பி ஆர் பாண்டியன் சிலர் உடல்களை தேடுவதற்கு கூட தமிழக அரசு எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியா அவர் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை பேரிடர் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளாக தமிழக அரசு இதுவரை அறிவிக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே உடனடியாக பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க முன்வர வேண்டும் என பி ஆர் பாண்டியன் தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.


