பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகை முன்பு NIA அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு ஆய்வுசெய்து வருகின்றனர். குண்டு வீசப்பட்டபோது பணியிலிருந்த காவலரிடமும் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
சென்னை கிண்டியிலுள்ள சர்தார் பட்டேல் சாலையில் உள்ள ஆளுநர் மாளிகையில், முக்கிய பிரமுகர்கள் செல்லும் எண் 1 -ஆம் நுழைவுவாயிலின் முன்பு கருக்கா வினோத் என்பவர் அக்டோபர் 25-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசினார். உடனே காவல்துறையால் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். சம்பவத்தினால் யாருக்கும் எந்த காயமோ அசம்பாவிதமோ ஏற்படவில்லை என்றாலும் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்தது. ஆளுநர் ரவி மத்திய உள்துறைக்கு அனுப்பிய அறிக்கையில், கருக்கா வினோத்தின் பின்புலம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்துள்ளதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மத்திய உள்துறை அனுப்பியது.
ரவுடி கருக்கா வினோத், சென்னை புழல் சிறையில் இருந்தபோது, அங்கு ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பினரோடு பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் வேறு சில அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்தது.
கருக்கா வினோத் மீது வெடிபொருள் தடுப்புச் சட்டம், கூட்டுச்சதி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடமும், NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குண்டு வீசிய கருக்கா வினோத் என்பவரை காவலில் எடுத்து விசாரிக்க பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் NIA அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்கு 5 நாட்கள் தேவை எனவும் NIA தரப்பில் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

