
பீகாரின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி, பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சிக்கும், மக்களுக்கும் கிடைத்துள்ள வெற்றி என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. இந்த மாபெரும் வெற்றி குறித்து அக்கட்சியின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இது பீகார் மக்களின் வெற்றி என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் பல்வேறு சிக்கல்களை எழுப்பியபோதும் அவற்றையெல்லாம் மக்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டு மாபெரும் வெற்றியைத் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையில் பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதாதளத்தின் காட்டாட்சி வந்துவிடக் கூடாது என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி அரசியலுக்கு ஆதரவாகவும் பீகார் மக்கள் வாக்களித்துள்ளதாக மகாராஷ்டிரத் துணை முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாகச் செயல்பட்டதாகக் கூறிய மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத், வளர்ச்சியை முன்வைத்தும், காட்டாட்சிக்கு எதிராகவும் செய்த பரப்புரைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்தார்.



