
ஆப்பிரிக்காவின் கானா நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான, த ஆபிசர் ஆப் த ஆர்டர் ஆப் த ஸ்டார் ஆப் கானா என்கிற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி எட்டுநாள் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். முதற்கட்டமாக ஆப்பிரிக்காவின் கானாவுக்குச் சென்ற அவருக்குத் தலைநகர் ஆக்ராவில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் அதிபர் ஜான் திரமானி மகாமா பிரதமர் மோடியைக் கட்டித் தழுவி வரவேற்றார்.
அதன்பின் கானா நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினரைப் பிரதமர் சந்தித்துப் பேசினார். அதன்பின் அதிபர் ஜான் திரமானி மகாமாவும் பிரதமர் மோடியும் இருநாட்டு உறவுகள் குறித்துப் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சுக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளிடையே வணிக பொருளாதாரத் தொடர்புகளை மேம்படுத்துவது பற்றியும், நிதித் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, நலவாழ்வு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும் இருவரும் பேசியதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்தைப்பின் போது பிரதமர் மோடிக்கு த ஆபிசர் ஆப் த ஆர்டர் ஆப் த ஸ்டார் ஆப் கானா என்கிற விருதையும் கானா அதிபர் வழங்கிச் சிறப்பித்தார்.
