
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் 18 சதவீதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும், 10 சதவீதம் பேர் கடுமையான குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் இருப்பதாக அஸ்ஸோஸியன் ஆப் டெமாகிராடிக் ரிவாம்ஸ் என்கிற ஜனநாயக சீர்திருத்தத்துக்கான பிரபல தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தன்னார்வ அமைப்பு, இந்தியாவில் தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பணியாற்றி வருகிறது. இந்த அமைப்பு நம்பகமான தரவுகளின் அடிப்படையில் ஆய்வு நடத்தி உண்மைகளை உலகுக்கு அறிவித்து வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
அப்போது, ஜோசப் விக்டர் கூறுகையில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள், வேட்பாளர்களின் பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் அவர்களின் குற்ற பின்னணி விவரங்களையும், சொத்து விவரங்களையும் ADR அமைப்பு ஆய்வு செய்திருப்பதாக தெரிவித்தார்..
இதன் அடிப்படையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்களில் 722 வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். அதேபோல், 404 வேட்பாளர்கள் கடுமையான குற்றப் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும், இவர்களில் 13 பேர் மீது கொலை வழக்கும், 44 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கும், 18 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் பதிவாகியிருப்பதாக கவலை தெரிவித்தார். தீவிர குற்ற வழக்குப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் விவரங்களை கட்சி அடிப்படையில் ஆய்வு செய்தபோது, அதிமுகவில் 60 வேட்பாளர்கள் மீதும், பாட்டாளி மக்கள் கட்சியில் 6 வேட்பாளர்கள் மீதும், பாஜகவில் 9 பேர் மீதும், தமிழக வெற்றிக் கழகத்தில் 43 பேர் மீதும், திமுகவில் 32 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியில் 5 பேர் மீதும், தேமுதிகவில் ஒரு வேட்பாளர் மீதும் தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதேபோல், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 981 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளதாக தெரிவித்த ஜோசப் விக்டர், அவர்களில் அதிக சொத்துகள் உள்ள 3 வேட்பாளர்களில், அதிமுக வேட்பாளரான லீமாரோஸ் மார்டின் 5 ஆயிரத்து 863 கோடி ரூபாய் அளவுக்கும், தவெக தலைவர் விஜய் 648 கோடி ரூபாய் அளவுக்கும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா 534 கோடி ரூபாய் அளவுக்கும் சொத்துகள் வைத்திருப்பதாக அவர்கள் சமர்பித்த பிரமாண பத்திரங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறினார்.
2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 13 சதவீத வேட்பாளர்கள் குற்றப் பின்னணி உள்ளவர்களாக இருந்தனர். தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களின் விகிதம் 18 சதவிதமாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, கொலை, பாலியல் வன்கொடுமை, கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களில் தண்டனை பெற்றவர்களை தேர்தலில் போட்டியிட நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்கள் மற்றும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் கட்சிகளின் வரி விலக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதேபோல், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தவருக்கு தவெகவில் சீட் வழங்கப்பட்டது பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் கைது செய்யப்பட்ட சுந்தரபாண்டியன் என்பவர் அந்த வழக்கிலிருந்து ஜாமினில் வெளியில் வந்த சில நாட்களில் அவருக்கு பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது தவெக.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவருக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சுந்தரபாண்டியன் மேல் 10க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாது 13 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட வழக்கில் இருந்து இவர் ஜாமினில் வெளிவந்ததாக சொல்லப்படுகிறது.இதேபோல், பட்டுக்கோட்டை தொகுதி தவெக வேட்பாளர் ஏனாதி மதன் மீது பாலியல் வழக்கு உள்ளதாகவும், அவ்வழக்கில் A1 குற்றவாளியே ஏனாதி மதன்தான் என்றும் வழக்கு பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக கம்பம் தொகுதி தவெக வேட்பாளர் ஜெகந்நாத் மிஸ்ரா என்பவர் வெளிப்படையாக சாதிய உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் பேசிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இதேபோல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் பேச்சாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக கட்சியின் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இப்படி,…2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் காணும் அதிமுக வேட்பாளர்களில் 60 பேர் மீதும் த.வெ.க.வில் 43 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் இருப்பதாக ஏடிஆர் அமைப்பின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. .



