Vladimir Putin:மக்கள் தொகை அதிகரிக்கணும்; நிறைய குழந்தை பெத்துக்கோங்க..!

Advertisements

மாஸ்கோ: நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யும்படி ரஷ்ய மக்களுக்கு அதிபர் புடின் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மக்கள் தொகை முக்கிய பங்காற்றுகிறது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளைக் கண்டு உலகின் பிற நாடுகள் அச்சம் கொள்வதற்கு மிக முக்கிய காரணம் இந்நாடுகளில் உள்ள அதிகப்படியான மக்கள் தொகை தான்.

ராணுவம் போன்ற மனித வளம் தேவைப்படும் துறைகளுக்கு அதிக மக்கள் தொகை இருப்பது அவசியம். மக்கள் தொகை குறைந்து வரும் நாடுகள், ராணுவம் போன்ற அத்தியாவசிய துறைகளுக்குக் கூட ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அந்த வகையில் ரஷ்யா கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

பிறப்பு விகிதம் சரிவு!
ரஷ்யா நடத்தும் உக்ரைன் போருக்கு வீரர்களே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் நிலைமை மோசமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில், 1990ம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டு மக்களை அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசே அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்து வருகிறது.

காதல் செய்யுங்கள்!
அந்நாட்டு அதிபர் புடின், ஒரு படி மேலே சென்று, நாட்டு மக்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அதிபர் புடின் கூறியதாவது: உக்ரைனுடன் நடந்து வரும் போரின் காரணமாக நாட்டின் மக்கள் தொகை குறைந்துள்ளது. இது தேசத்தின் எதிர்காலத்திற்கு பேரழிவு. வேலையில் மிகவும் பிஸியாக இருப்பது சரியான காரணம் அல்ல.

நொண்டிச் சாக்கு!
ஆனால் ஒரு நொண்டிச் சாக்கு. இனப்பெருக்கத்திற்கு வேலை ஒரு தடையாக இருக்கக் கூடாது. வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் காபி இடைவெளியின்போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ரஷ்யாவில், 2023 ஜன., 1 நிலவரப்படி, 14.64 கோடி மக்கள் தொகை உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் தற்போதைய கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்குத் தோராயமாக 1.5 குழந்தைகளாக உள்ளது. இது மக்கள்தொகை நிலைத்தன்மைக்கு தேவையான 2.1 க்கும் குறைவாக உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *