மலைப்பகுதியில் சிக்கித் தவித்தவர்களைக் கயிறு கட்டி மீட்ட எல்லைக் காவல் படையினர்!

உத்தரக்கண்ட் மாநிலம் உத்தரக்காசியில் வெள்ளத்தால் பேரழிவுக்குள்ளான இடத்தில் இந்திய ராணுவம், தேசியப் பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட மத்தியப் படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இமாச்சலத்திலும், உத்தரக்கண்ட் மாநிலத்திலும் நேற்றுத் திடீரெனப் பெய்த பெருமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உத்தரக்கண்டின் உத்தரக்காசி மாவட்டம் தரளி என்னுமிடத்தில் சேறும் சகதியுமாக வந்த வெள்ளம் ஊரையே அரித்துச் சென்றது

ஆற்று வெள்ளத்தில் நெடுஞ்சாலைகளும், பாலங்களும் அரித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்திய ராணுவம், இந்தோ திபெத் எல்லைக் காவல் படை, தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் படையினர் 130 பேரை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட ஊர்களைச் சேர்ந்த பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் மண்ணுக்குள் புதைந்திருக்கவோ, வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படவோ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இமாச்சலத்தில் மலைப்பகுதியில் சிக்கித் தவித்த புனிதப் பயணிகள் 413 பேரை இந்தோ திபெத் எல்லைக் காவல்படையினர் கயிறு கட்டி மீட்டனர்.உத்தரக்கண்ட் மாநிலம் அரித்துவாரத்தில் கங்கையாற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது

உத்தரகாசியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மீட்புப் பணியில் காவல்துறையைச் சேர்ந்த மூன்று கண்காணிப்பாளர்கள், பத்துத் துணைக் கண்காணிப்பாளர்கள், 160 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். உணவுப் பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் வழங்குவதைச் சீரமைத்து வருவதாகவும் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *