Karchapeswarar Temple: மண்டல பூஜை நிறைவு விழாவில் 1008 சங்குஅபிஷேகம்!

Advertisements

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழாவில் 1008 சங்குகளில் புனித நீர் வைத்துச் சிறப்புப் பூஜை செய்து கச்சபேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், திருமால் ஆமை வடிவில் வந்து ஈஸ்வரனை வணங்கிப் பேறு பெற்ற, திருத்தலமாகவும், தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்க்கும் திருத்தலமாக விளங்குவதுமான காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 2005 -ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில் 4 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றதை முன்னிட்டு கடந்த 48 நாட்களாக மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.48 வது நாள் மண்டல அபிஷேக பூஜையின் நிறைவு நாளான  இன்று  திருக்கோவில் யாகச் சாலையில் 1008 சங்குகளில் புனித நீர் வைத்து, சிவாச்சாரியார்கள், மந்திரங்கள் ஒலிக்கச் சிவவாத்தியங்கள் மேளதாளங்கள் முழங்கச் சிறப்புப் பூஜைகள் செய்து சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் செய்யப்பட்டது.

சங்காபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.சங்காபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

சங்காபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளைத் திருக்கோவில் திருப்பணி குழுவின் தலைவர் எஸ். பெருமாள், செயலாளர் ஏ.சுப்பராயன், செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் எம்சிவகுரு, ஆகியோர் தலைமையிலான விழா குழுவினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *