
தேர்தல்னாலே பிரியாணி தான் ஞாபகத்துக்கு வரும்… ஆனா, இது கொஞ்சம் டிஃபரண்ட்..!!
மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர்.சரவணன் நடமாடும் மலிவு விலை உணவகத்தை துவக்கி இருக்கிறார். பத்து ரூபாய்க்கு நான்கு இட்லி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உடன் இந்த நடமாடும் உணவகம் தெருத்தெருவாக மதுரை பகுதியில் சுற்றி வருகிறது.
தமிழகத்தில் மத்திய மாவட்டமான மதுரையில் இருக்கும் அரசியல் புள்ளிகள் தீவிரமாக தேர்தல் வேலையை தொடங்கி விட்டனர். அதிமுக தரப்பில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் டாக்டர் சரவணன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தாலும் தனக்கு செல்வாக்குள்ள மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் இந்த முறை போட்டியிட விருப்பமான தாக்கல் செய்திருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் வேலை பார்த்ததால் நிச்சயம் அவருக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படும் என சொல்லப்படுகிறது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களாகவே அந்த பகுதியில் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார் சரவணன். மேலும் எடப்பாடி பழனிச்சாமி மதுரை வந்தபோது பொதுமக்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்டவற்றை வழங்கி அழைப்பு விடுத்தார். மேலும் தீபாவளி பொங்கல் பண்டிகையின் போதும் சிறப்பான கவனிப்பு இருந்தது.
இதையெல்லாம் விட தற்போது அடுத்ததாக ஒரு புது ஐடியாவை யோசித்து இருக்கிறார் சரவணன். தற்போது சூர்யா டிரஸ்ட் – சரவணா மருத்துவமனை இணைந்து மலிவு விலை நடமாடும் உணவகத்தை நேற்று தொடங்கி வைத்திருக்கிறார் சரவணன். இதில் சினிமா நடிகர் கஞ்சா கருப்பு, சின்னத்திரை புகழ் மதுரை முத்து ஆகியோர் கலந்து கொண்டு அந்த வாகனத்தை தொடங்கி வைத்தனர். இந்த நடமாடும் உணவகம் அப்பகுதி முழுவதும் சுற்றிவருகிறது.
காலை மதியம் இரவு என மூன்று வேளை உணவு வழங்கப்பட இருக்கிறது. 10 ரூபாய்க்கு நான்கு இட்லி, தேநீர் மற்றும் வெரைட்டி ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. வழக்கமாக தேர்தல் சமயத்தில் தொண்டர்களுக்கு பிரியாணி உள்ளிட்டவற்றை வழங்கி வேட்பாளர்கள் அசத்துவார்கள். சற்று வித்தியாசமாக தொகுதி மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் உணவு வழங்கும் நடமாடும் உணவகத்தை சரவணன் தொடங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை மதுரை பகுதி மக்களும் வரவேற்றுள்ளனர்.
டாக்டர் சரவணனின் இந்த ’10 ரூபாய் உணவு’ திட்டம் வெறும் தேர்தல் கால யுக்தியா அல்லது நீண்ட கால மக்கள் சேவையா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், தற்போதைய விலைவாசி உயர்வில் இது சாமானிய மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.


