குடியரசு தின அணிவகுப்பு அலங்கார ஊர்திகளுக்கு முதலமைச்சர் பரிசு!

Advertisements

சென்னை:

சென்னை, காமராசர் சாலையில் நேற்று நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கவர்னர் ஆர்.என். ரவி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், டாக்டர் நாராயண சாமி நாயுடு வேளாண்மை விருது, சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் கோப்பைகள் ஆகிய பதக்கங்களையும், கோப்பைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளையும், தஞ்சாவூர்-தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளையும், பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை பார்வையிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், குடியரசு நாள் விழாவில் நடைபெற்ற பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்ற கொளத்தூர், எவர்வின் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவியர்களுக்கும், 2-ம் பரிசு பெற்ற மயிலாப்பூர், சிறுவர் தோட்டம் மேல்நிலைப் பள்ளி மாணவியர்களுக்கும், 3-ம் பரிசு பெற்ற அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர்களுக்கும் கேடயங்களையும்,

கல்லூரி மாணவியர்களின் கலை நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்ற ராணி மேரி கல்லூரி மாணவியர்களுக்கும், 2-ம் பரிசு பெற்ற கொளத்தூர், சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவியர்களுக்கும், 3-ம் பரிசு பெற்ற குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வர் நானா லால் பட் மகளிர் கல்லூரி மாணவியர்களுக்கும் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.

குடியரசு நாள் விழாவில், அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில், முதல் பரிசு பெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோருக்கும்,

2-ம் பரிசு பெற்ற காவல் துறையின் சார்பில் உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் ஆகியோருக்கும், 3-ம் பரிசு பெற்ற இந்து சமய அற நிலையத் துறையின் சார்பில் இந்து சமய அறநிலை யத்துறை ஆணையர் ஸ்ரீதர், இணை ஆணையர் லட்சுமணன் ஆகியோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பொதுத்துறை துணைச் செயலாளர் (மரபு) பத்மஜா, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், அரசு உயர் அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *