
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ளது. இந்நிலையில் அணைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பணியில் மும்மரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் கட்சி சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது . இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ வாக்குகளைச் சிதறடிக்கப் புதிய கட்சி தோன்றியுள்ளது என்று தவெக-வை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நூர் முஹம்மது ஷா அவுலியா தர்க்கா மைதானத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும் அதனைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக விசிக தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திருமாவளவன், திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக்கு எதிராக இஸ்லாமிய கிறிஸ்தவ வாக்குகளைச் சிதறடிக்க புதிய கட்சி தோன்றி உள்ளதாகவும் இதனை நம்பி மக்கள் ஏமாந்து விட்டால் தமிழ்நாடு இன்னொரு உத்தரப்பிரதேசமாக மாறும் என்றும் தமிழக வெற்றி கழகத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
