சட்டம்–ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டம்–ஒழுங்கு தொடர்பான தகவல்களைப் பெறுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆர்டிஐ சட்டத்தின் அடிப்படை நோக்கமே அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் உறுதி செய்வதாகும் என்று தெரிவித்துள்ளார். எனவே, “சட்டம்–ஒழுங்கு” என்ற பரந்த சொல்லைக் காரணம் காட்டி காவல்துறை தொடர்பான தகவல்களை ஒட்டுமொத்தமாக ஆர்டிஐ சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்குவது நியாயமானதல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆர்டிஐ சட்டத்தின் வரம்பைக் குறைக்கும் இந்த நடவடிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


