அஜித் குமார் அடித்துக்கொலை-விஸ்வரூபம் எடுத்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் !

Advertisements

தமிழ்நாட்டில் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் அருகே நடந்த அஜித்குமார் படுகொலை தொடர்பான பரபரப்பு தகவல்கள் நாள்தோறும் வெளிவந்தவண்ணம் உள்ளன.இந்த வழக்கு இந்த அளவுக்குப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் வழக்கு விசாரணையை மேற்கொண்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளட் ஆகிய இருவரும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பின் வழக்கறிஞர்களைவிட அவர்கள் ஓபன் கோர்ட்டில் வீசிய கேள்விக்கணைகள் புல்லரிக்க வைத்தன.

நேரடியாக ஊடகங்களிலும் இந்தக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. போலீஸாரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமார் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் பாதுகாப்பு ஊழியராகப் பணிபுரிந்து வந்தார்.இந்தக் கோவில் சக்தி வாய்ந்த கோவில் என்று அந்தப் பகுதி மக்களால் வருணிக்கப்படுகிறது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் போலீஸ் நிலையம் நீதிமன்றத்தை நாடுவதை விட இந்தக் கோவிலில் வந்து முறையிடுவது தான் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். அந்த அளவிற்கு நீதி தேவதையாக அருளாட்சி நடத்தி வருகிறார் இந்தப் பத்திரகாளி அம்மன்.

மடப்புரம் பத்திரகாளி அம்மனே நீதிபதிகளாக மாறி நியாயம் வழங்கி இருப்பதாக அந்த நீதிமன்ற காட்சியைப் பார்த்த ஊடகங்கள் விமர்சித்திருந்தன. அதைத்தொடர்ந்து அந்தக் கோவிலைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் தற்போது வெளிவரத் தொடங்கி இருக்கிறது. கூகுளில் அதைத் தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாமும் வந்த கோவிலைப் பற்றிப் பார்க்கலாம்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பத்ரகாளியம்மன் ஆலயம். இது மதுரையிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மூலவர் பத்ரகாளி. தல விருட்சம் வேம்பு. தீர்த்தம் பிரம்ம குண்டம், மணிகர்ணி தீர்த்தம். இக்கோயிலில் பத்ரகாளி அம்மன் அக்னியையே கிரீடமாகக் கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்ற நிலையில் அருளாட்சி செய்கிறாள். தேவாரம் பாடிய திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயில் அருகில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் அய்யனார் காவல் தெய்வமாகவும், வினை தீர்க்கும் விநாயகராக விநாயகப் பெருமானும் அருள்புரிகின்றனர். அம்மனுக்கு எலுமிச்சம் பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆடை அணிவித்தலை படையலாகக் கருதி செய்கிறார்கள். செய்வினை, பில்லி சூனியம் போன்றவற்றை இந்த அம்மன் தீயாய் பொசுக்கி விடுவதால் இத்தலத்து அம்மனை தங்களுடைய குலதெய்வமாக மக்கள் வழிபடுகிறார்கள். இங்குப் பத்ரகாளியம்மன் ஆக்ரோஷமான சக்தி உள்ளவராகக் கருதப்படுகிறார். இங்குள்ள அம்மனை வணங்கினால் கோர்ட் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரனைகளில் வெற்றி கிடைப்பதாகவும், வியாபார வளர்ச்சிக்காகவும் இந்த அம்மனை வழிபடுகின்றனர்.

வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். பௌர்ணமி பூஜை, பாலாபிஷேகம், தமிழ் மாத முதல் செவ்வாய் தோறும் 1008 திருவிளக்கு பூஜை, சித்திரை வருடப்பிறப்பு, பிள்ளையார் சதுர்த்தி, தைப்பொங்கல், சிவராத்திரியெனத் திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

கொடுக்கல், வாங்கல்களில் சிக்கல்கள், சொத்து தகராறு, குடும்ப சண்டை போன்றவற்றில் நீதி எதுவும் கிடைக்காது ஏமாந்தவர்கள் இங்கு வந்து நீதியின் தேவதையாகக் காளியைக் கருதி அவள் முன்னால் காசு வெட்டிப் போட்டுக் காளியிடம் முறையிடும் பழக்கம் உள்ளது. காளியிடம் முறையிட்டபின்பு கிழக்கு வாசல் வழியாக வெளியேறும் பழக்கமும் உள்ளது.

அம்பாளுக்கு நிழல் தரும்விதமாகப் பிரம்மாண்டமான குதிரை வாகனம் உள்ளது. பொதுவாக, கோயில்களில் குதிரைமீது அமர்ந்திருக்கும் அய்யனார், இக்கோயிலில் தனியாகச் சன்னிதியில் காட்சி தருவது சிறப்பு அம்சமாகும். மிகவும் பழைமையான 1000 ஆண்டுகள் முந்தைய கோயில் இது. அய்யனார் இங்கு மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் வலது கை நீண்ட சுதையின் மீது அமைந்து காட்சி தருகிறார். இவர்தான் இக்கோயிலின் காவல் தெய்வம். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என மக்கள் கூறுகின்றனர். அய்யனாருக்கு இருபுறமும் தலையை அறுத்துப் பலியிட்டுக்கொள்ளும் நவகண்ட சிற்பங்கள் உள்ளன. அய்யனாரின் கருவறையில் சப்த கன்னியரும் உள்ளனர்.

அம்மனின் தோற்றம்: இங்குப் பத்ரகாளியம்மன் சம்ஹார தேவதையாகக் காட்சி தருகிறாள். திறந்தவெளியில் நின்ற கோலத்தில் காட்சி தரும் பத்ரகாளி அம்மன் வலக்கையில் திரிசூலம் கீழ்நோக்கியவாறு அநீதியை அழிப்பதாகவும், தலையில் சூடிய அக்னி அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் சாம்பலாக்குவதாகவும் உள்ளது. காளிக்குப் பின்புறம் 13 அடி உயர பெரிய குதிரை சிலை உள்ளது. குதிரை காளிக்கு நிழல் கொடுக்கும் விதமாகத் தன் பின்னங்கால்களை கீழே ஊன்றி முன்னங்கால்களை தூக்கி காளியின் இரு புறங்களில் உள்ள பூதகணங்களின் தோள்கள்மீது வைத்தவாறு காணப்படுகின்றன. இங்கு நேர்த்திக்கடனாகக் காளிக்கு எலுமிச்சை மாலை அணிவித்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

பிரளய காலத்தில் மதுரை மாநகர் வெள்ளத்தால் சூழப்பட்டதும் மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்ட வேண்டும் என்று ஈசனிடம் வேண்ட, சிவபெருமான் தனது கழுத்தில் உள்ள ஆதிசேஷனை எடுத்து மதுரையை வளைத்தார் என்று கூறப்படுகிறது. மேற்கே திருவேங்கடமும், தெற்கே திருப்பரங்குன்றமும், வடக்கே திருமாலிருஞ்சோலையும் வைத்து எல்லையை வகுத்த ஈசன், கிழக்கில் மடப்புரத்தில் ஆதிசேஷனின் தலையையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டினார். அப்பொழுது ஆதிசேஷன் வாயிலுள்ள விஷத்தை அம்மன் உண்டு இங்குக் காளியாக எழுந்தருளியதாகவும், அய்யனார் அம்மனுக்கு தனது வாகனமாகிய குதிரையை நிழலாகத் தந்து அடைக்கலம் கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இத்தல அய்யனார், ‘அடைக்கலம் காத்த அய்யனார்’ என்று பெயர் பெற்றார் என்று கூறுகிறது தல வரலாறு.

மற்றொரு குறிப்பில் இந்தக் கோவிலில்பத்ரகாளி அம்மனின் தீவிர பக்தன் ஒருவர் காளியிடம் தேவியிடம் நான் எப்பொழுதும் உன்னுடனே இருக்கும்படியான மனம் உருகி வரம் கொடு தாயே என்று கேட்க.அவரது பக்தியைக்கு இணங்கக் காளி அவரைக் குதிரையாக மாற்றி, தனக்கு நிழல்தரும் குடையாக வைத்துக்கொண்டாராம்.

இங்கு அம்பாள் தன்னை தேடி வரும் பக்தர்களைக் காப்பதற்கு வலது கையில் திரிசூலமும் அதர்மத்தால் தலைதூக்கி ஆடியவர்களை அழித்தபிறகு மீண்டும் எழவிடாமல் எரித்துச் சாம்பலாக்குவதற்காகத் தலையில் அக்னி கிரீடத்தைச் சுமந்து நிற்கிறாள்.காளி என்றாலே தவறுச் செய்பவர்களுக்கு ஒரு வித பயம் ஏற்படும்.அப்படியாக இந்த மடப்புரத்து பத்ரகாளி துஷ்டர்களுக்கு மிகவும் ஆபத்தானவளாகத் திகழ்கிறாள்.ஆதலால் அந்த ஊர் வட்டாரத்தில் இருக்கும் மக்கள் தங்கள் நியாயம் கிடைக்க இவளை மிகவும் நம்புகிறார்கள்.இரண்டு நபர்களிடையே ஏதேனும் கருத்துவேறுபாடு அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்சனை என்றால் அந்தக் கோவில் மண்டபத்தில் சூடம் ஏற்றி நான் சொல்லுவது உண்மை என்று சத்தியம் செய்வார்கள்.

இதில் யாராவது பொய் சத்தியம் செய்தால் அவர்களைக் காளி தேவி முப்பது நாட்களுக்குள் அல்லது காளி தேவியின் எல்லையைத் தாண்டும் முன் கேள்வி கேட்பாள் என்று மிகத் தீவிரமாக மக்கள் நம்புகின்றனர். பின்னதாக இங்கு நடக்கும் இன்னொரு முக்கியமான வேண்டுதல் காசு வெட்டிப் போடுவது.

காளியின் முகத்துக்கு எதிரே தரையில் ஒரு பட்டியக்கல் பதித்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பக்கத்திலேயே உளியும் சுத்தியலும் வைத்திருக்கிறார்கள்.

அநியாயம் பண்ணுபவர்களைத் தட்டிக்கேட்க முடியாதவர்கள் ஈரத்துணியுடன் இங்கு வந்து காளிக்கு எதிரே உட்கார்ந்து காசை வெட்டிப் போட்டு,மனம் உருகி அவர்களின் அநியாயத்தை நீ தான் தட்டி கேட்க வேண்டுமே என்று மனம் உருகி வேண்டுகிறார்கள்.

இத்தனை சக்தி வாய்ந்த பத்திரகாளி அம்மனை பற்றிப் படிக்கும்போது நமக்கும் அந்தக் கோவிலுக்குச் சென்று பார்க்க வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

செய்தித்தொகுப்பு : செந்தூர் பாண்டியன்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *