சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் மோடி வல்லவர் இல்லை – எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி சொல்வதில் வல்லவராக இருப்பதாகவும், சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் அவர் வல்லவர் இல்லை என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுத் தனது கருத்தை எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் தயாரிப்போம் என்கிற முழக்கத்துடன் தொடங்கிய திட்டத்தில் உற்பத்தி இதுவரை இல்லா வகையில் 14 விழுக்காடு என்னும் அளவுக்குக் குறைந்துள்ளதையும், அதே நேரத்தில் வேலையின்மை மிகவும் உயர்ந்துள்ளதையும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி குறைந்துள்ள அதே நேரத்தில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களின் அளவு இருமடங்காக அதிகரித்துள்ளதையும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். உற்பத்தி சரிவு, வேலையின்மை ஆகியவற்றைப் போக்குவதற்குப் பிரதமரிடம் புதிய உத்திகள் எதுவும் இல்லை என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் ஓசையின்றி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவைப் பிற நாடுகளின் சந்தையாக்கும் நிலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *