தோஷம் இருப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகர்..!

Advertisements

பெண்ணுக்குத் தோஷம் இருப்பதாகக் கூறிய அர்ச்சகர் அவரைக் கோவிலுக்கு வரச்செய்து வலுக்கட்டாயமாகப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சோதிடம், ஆன்மீகம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தக் கொடுமை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த கணவன் மனைவி திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரிந்து வாழ்ந்து வரும் பெண் பள்ளிக்கரணையில் அவரது தாயாரின் வீட்டில் குடியிருந்து வருகிறார். அவர், வீட்டின் அருகிலுள்ள ஆதிபுரீஸ்வரர் ஆலயத்துக்கு நாள்தோறும் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணின் கணவன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார் அதில் தனது மனைவியை வலுக்கட்டாயமாக அர்ச்சகர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தின் அர்ச்சகர் அசோக் பாரதி அந்தக் கோவிலுக்குச் சென்ற தனது மனைவியிடம் தோஷம் இருப்பதாகக் கூறி அதற்குப் பரிகாரம் காண வடபழனிக் கோவிலுக்கு வந்தால் ருத்ராட்சம் தருவதாகக் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதை நம்பிய தன் மனைவி ஜூன் 28ஆம் தேதி வடபழனி கோவிலுக்குச் சென்றபோது, அர்ச்சகர் அசோக் பாரதி கோவிலில் ருத்ராட்சம் இல்லை என்றும், அருகில் ஒரு வீட்டில் ருத்ராட்சம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அங்கேயே தோசமும் கழித்து விடலாம் என்று கூறி ஏமாற்றிக் கூட்டிச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அங்குத் தனது மனைவிக்குத் தண்ணீரில் ஏதோ கலந்து கொடுத்ததாகவும், அதனால் மயக்கமடைந்த அவரை  அர்ச்சகர் அசோக் பாரதி வலுக்கட்டாயமாகப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்தப்  புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார். மயக்கம் தெளிந்த பெண் ஏன் இப்படிச் செய்தீர்கள் என அர்ச்சகர் அசோக் பாரதியிடம் கேட்டபோது, இதைக் குறித்துக் கணவரிடமோ, காவல் துறையிடமோ கூறினால் கொன்று விடுவதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தான் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தர்மகர்த்தாவாக இருப்பதாகவும், தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் அர்ச்சகர் அசோக் பாரதி தன் மனைவியிடம் கூறியதாகவும் புகாரில் தெரிவித்து இருக்கிறார்.இதையடுத்துக் கார்த்திக் பிரகாஷ் என்பவரும் செல்பேசி மூலம் இந்தப் பெண்ணின் குடும்பத்தாரைக் கொன்று விடுவதாகக் கூறிக் கொலை மிரட்டல் விடுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தன் மனைவியை ஏமாற்றிப் பாலியல் பலாத்காரம் செய்த அர்ச்சகர் அசோக் பாரதி மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெண்ணின் கணவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.அந்தப் புகாரின் அடிப்படையில் வடபழனி காவல்துறையினர் அர்ச்சகர் அசோக் பாரதி மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் விசாரணையில் அர்ச்சகர் அசோக் பாரதி பள்ளிக்கரணை கோவிலுக்கு வரும் பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறிப் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், இது தொடர்பாகப் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் கோவிலுக்கு வரும் பெண்களிடம் தோஷம் கழிப்பதாகக் கூறிப் பல இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் அது தொடர்பாகவும் பள்ளிக்கரணையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அர்ச்சகர் அசோக் பாரதியை இந்து அறநிலைத்துறை இரண்டு முறை சஸ்பெண்ட் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *