உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா சுமார் 47 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை பயன்படுத்துவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் ஐநா சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அப்போது, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா சுமார் 47 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். இதில் இந்தியா, நேபாளம், கானா, தஜிகிஸ்தான், ஏமன், கென்யா, ஜிம்பாப்வே, உள்ளிட்ட பல நாடுகளும் அடங்கும் என்று குறிப்பிட்டார்.
அவ்வப்போது, குறிப்பிட்ட போர்க்கைதிகளைத் தாயகத்திற்குத் திருப்பி அனுப்புமாறு சம்பந்தப்பட்ட நாடுகளிடம் இருந்து கோரிக்கைகளும் தங்களுக்கு வருவதாகத் தெரிவித்தார். இந்தப் போரில் ஈடுபடும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் போர்க்களத்தில் உயிரிழந்து கொண்டிருப்பதாகவும், அவர்கள் ஏமாற்று வேலைகள் மற்றும் தந்திரங்கள் மூலம் போர்க்களத்தில் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறினார். ரஷிய அதிபர் புதின் இந்த போரில் மற்ற நாடுகளை இழுத்துவிடுவதற்கு முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.




