இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமாகா ஆதரவு – ஜி.கே.வாசன் அறிவிப்பு!

இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்குத் தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவளிப்பதாகத் தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய தவெக அரசு விளங்குவதாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். பெருந்தலைவர் காமராஜரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற தவெகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், மக்களுக்கு நேர்மையான ஆட்சியை, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்கத் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

குறிப்பாக குறைந்த நாட்களிலேயே தமிழக மக்களுக்கு அதிக நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார் நம் முதலமைச்சர் விஜய் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே புதிய தவெக அரசின் நல்ல தூய முயற்சிக்கு நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவளிக்கிறது என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *