மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதற்காக மட்டுமே சட்டமன்றம் இருக்கிறது என்பதைப் போன்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறித்தும் முதலமைச்சர் விஜய் மக்களுக்கு விளக்குவார் என்று எதிர்பார்த்தோம் எனத் தெரிவித்தார்.
ஆனால், அதற்குப் பதிலாக பழைய கதைகளை பேசிவிட்டு, 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான தற்போது சட்டரீதியாக பயன்படுத்த முடியாது எனக் கூறப்படும் கமிஷன் அறிக்கைகளை உலகத்தின் உண்மை போல் முதலமைச்சர் பேசுவதாகக் கூறினார். மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதற்காக மட்டுமே சட்டமன்றம் இருக்கிறது என்பதைப் போன்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சட்டமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டால் அதற்கு உரிய பதில் அளிக்காமல் கீழ்த்தரமான முறையில் பதிலளிப்பது வருத்தமளிக்கிறது என்று கூறினார். எனவே, மக்கள் நலனில் முதலமைச்சர் பொறுப்புடன் செயல்பட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ளார்.



