“சதி முறியடிப்பு” என பிரியங்கா காந்தி பதில்..!

Advertisements

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டது கருப்பு நாளாகும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரைக்கான சதியை முறியடித்துள்ளதாகப் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறு வரையறை ஆகியவற்றுக்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் கூட்டப்பட்டது. அரசியல் சட்டத் திருத்த முன்வரைவு மக்களவையில் முதல் நாளில் கொண்டுவரப்பட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெறாததால் மசோதா தோல்வியடைந்தது. இதையடுத்து சிறப்புக் கூட்டத்தின் மூன்றாம் நாளான இன்று மக்களவையும் மாநிலங்களவையும் தொடங்கிய உடனே நாள் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

அதன்பின் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிஸ் உறுப்பினர்கள் குமாரி செல்ஜா, வேணுகோபால் ஆகியோர் இருந்தனர்.

இது குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரசின் பிரியங்கா, இந்திய அரசியலமைப்பைக் காத்ததைத் தாங்கள் கொண்டாடுவதாகத் தெரிவித்தார். தொகுதி மறுவரையறை செய்வதற்கான சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான பழைய மசோதாவையே கொண்டுவர வேண்டும் என்றும் பிரியங்கா வலியுறுத்தினார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது பற்றி நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் இந்த நாட்டுப் பெண்களின் கோபத்துக்கு ஆளாகும் என்று தெரிவித்தார். மகளிருக்கு நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு கொண்டுவரும் மசோதாவைத் தோற்கடித்த அவர்கள் மீதான கரும்புள்ளியை ஒருபோதும் அழிக்க முடியாது என்றார். இந்த மசோதா தோற்கடிக்கப்பட்ட நாள் ஒரு கருப்பு நாள் என்று கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *