
சென்னை:
ஈசிஆர் வீடியோ விவகாரத்தில் கடுமையான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். பெண்கள் வாகனத்தைச் சிலர் விரட்டிச் சென்று அச்சுறுத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ள அவர், குற்றம் செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ஈசிஆர் சாலையில் பெண்களின் காரைத் துரத்திச் சென்று இளைஞர்கள் சிலர் அத்துமீறும் வகையில் வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாகப் பல்வேறு அரசியல் கட்சியினரும் சென்னையிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி இருப்பதாக விமர்சித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஈசிஆர் வீடியோ தொடர்பாகத் தாம்பரம் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில், முட்டுக்காடு அருகே வந்தபோது இளைஞர்கள் 7,8 பேர் இரு கார்களில் வந்து எங்களை வழிமறித்து பிரச்சனை செய்தனர்.
அப்போது காரை நிறுத்தாமல் சென்றபோது, வீட்டின் அருகே காரினை நிறுத்தினர்.
அப்போது காரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக இளைஞர்கள் எங்களுடன் தகராறு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்துறை தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதேபோல் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்யத் தொடங்கினர்.
இந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் இருந்த கார்களைப் பறிமுதல் செய்த போலீசார், இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கானத்தூர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் ஓட்டி வந்த வாகனத்தை, ஆண்கள் சிலர் வழிமறித்து அவர்களை விரட்டிச் சென்று அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமின்றி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும், முறையான விசாரணைமூலம் உடனடியாக அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.
அதே வேளையில், பெண்கள் பாதுகாப்பில் எந்த வித சமரசமும் இருக்க கூடாது என்று நினைப்பவர் நமது முதல்வர் என்று பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் பலரும் திமுக மீது குற்றம்சாட்டி வந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரடியாகக் குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
