West Bengal : இரண்டாம் கட்டத் தேர்தலில் வன்முறை.!

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டச் சட்டமன்றத் தேர்தலின் போது பல இடங்களில் மோதல் ஏற்பட்ட நிலையில், அங்கு ஐந்நூறு கம்பெனி துணை இராணுவப் படையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது. இந்தத் தொகுதிகளில் சராசரியாக 90 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது பல இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டபோது பாஜக வேட்பாளருக்கே மத்தியத் துணை இராணுவப் படையினர் பாதுகாப்பு அளித்தனர். இதனிடையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் மேற்கு வங்கத்தில் பாஜக 150 முதல் 170 தொகுதிகள் வரை வென்று முதன்முறையாக ஆட்சியமைக்கும் என்று தெரியவந்துள்ளது.

இதனாலும், கடந்த முறை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் பல இடங்களில் வன்முறை மூண்டதாலும் இந்த முறை மேற்கு வங்கத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு வந்த மத்தியப் படையினரைத் தொடர்ந்து அங்கேயே தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் காவல்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, தொழில்காப்புப் படை, இந்தோ திபெத் எல்லைக் காவல் படை உள்ளிட்ட மத்திய ஆயுதப் படையின் 500 கம்பெனிகள் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து மேற்கு வங்கத்திலேயே நிலைகொண்டிருக்கும் என்று சிஆர்பிஎப் தலைவர் ஜி பி சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *