
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று என்டிடிவி பீப்பிள்ஸ் பல்ஸ், ரிபப்ளிக் பி மார்க் நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளன.
டைம்ஸ் நவ், சிஎன்என் நிறுவனங்களின் கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன. இதுபற்றி விரிவாகப் பார்க்கலாம்…
புதுச்சேரியில் 30 தொகுதிகள், கேரளத்தில் 140 தொகுதிகள், அசாமில் 126 தொகுதிகள் ஆகியவற்றுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் நாள் தேர்தல் நடைபெற்று முடிந்தது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் நாள் ஒரேகட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளில் ஏப்ரல் 23ஆம் நாளும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளில் இன்றும் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே நான்காம் நாள் எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகியன ஓரணியாகப் போட்டியிட்டன. இதேபோல் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமிழ் மாநிலக் காங்கிரஸ் ஆகியன மற்றொரு அணியாகப் போட்டியிட்டுள்ளன. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் கண்டுள்ளது. இந்தக் கட்சி 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.
நடிகர் விஜய் புதிதாகத் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகமும் 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் கண்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லா வகையில் நால்முனைப் போட்டி நிலவியது. வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்குகளில் 84 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் மே நான்காம் நாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே தேர்தலில் வாக்களித்து வெளியே வந்த வாக்காளர்களிடம் தனியார் நிறுவனங்கள் கருத்துக்கேட்டு அதன் அடிப்படையில் தங்கள் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன. எண்டிடிவி பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைக்கும் என்று தெரிவித்துள்ளது.
அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் 18 முதல் 24 இடங்களைப் பிடிக்கும் என்றும், நாம் தமிழர் கட்சி 2 முதல் 6 இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ரிபப்ளிக் டிவியின் பி மார்க் கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைக்கும் என்று தெரிவித்துள்ளது.
அதிமுக 65 முதல் 80 இடங்களைப் பிடிக்கும் என்றும், தமிழக வெற்றிக் கழகம் 16 முதல் 26 இடங்களைப் பிடிக்கும் என்றும், நாம் தமிழர் கட்சி 1 முதல் 6 இடங்களைப் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ரிபப்ளிக் டிவியின் மேட்ரிஸ் கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 122 முதல் 132 இடங்களைப் பெறும் என்றும், அதிமுக கூட்டணி 87 முதல் 110 இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் 10 முதல் 12 இடங்களைப் பிடிக்கும் என்றும், நாம் தமிழர் கட்சி 6 இடங்களைப் பிடிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மிசன் சாணக்கியா கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 145 முதல் 160 தொகுதிகளைப் பிடிக்கும் என்றும், அதிமுக கூட்டணி 50 முதல் 65 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும், தமிழக வெற்றிக் கழகம் 13 முதல் 18 இடங்களைப் பிடிக்கும் என்றும், நாம் தமிழர் கட்சி 5 முதல் 8 இடங்களைப் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது. டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 75 முதல் 95 தொகுதிகளை மட்டுமே பிடித்து ஆட்சியை இழக்கும் என்று தெரிவித்துள்ளது.
அதிமுக கூட்டணி 128 முதல் 147 தொகுதிகள் வரை வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் எட்டு முதல் 15 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. சிஎன்என் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 103 முதல் 113 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணி 114 முதல் 124 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் 4 முதல் 10 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளது.
ஜேவிசி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 75 முதல் 95 தொகுதிகளில் வென்று ஆட்சியை இழக்கும் என்று தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணி 128 முதல் 147 தொகுதிகள் வரை வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் எட்டு முதல் 15 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.




