
கன்னியாகுமரியில் விடுமுறை நாளையொட்டிக் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தைக் கண்டுகளித்தனர்.
பன்னாட்டுச் சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயத்தையும் சூரியன் மறைவையும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க முடியும் என்பது சிறப்பாகும்.
கன்னியாகுமரியில் வழக்கமாகவே வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இந்த வாரத்தில் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி போன்ற தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் அதிகாலை சூரிய உதயத்தைக் காண உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலச் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து சூரிய உதயத்தைக் கண்டும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கத்தில் கடலில் நீராடிப் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.
காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆகியவற்றையும் கண்டுகளித்தனர்.
வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளதால் வணிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.



