
ஹமாஸ் குழுவினருக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்.
இஸ்ரேல் மக்கள் போரை எதிர் கொண்டுள்ளதாகவும், ஹமாஸ் குழுவினருக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ கூறியுள்ளார்.
ஜெருசலேம்: இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்படும் ஆயுதக்குழுக்கள் ராக்கெட்களை வீசித் தாக்குதல் நடத்தின. முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்களை வீசியதாக அந்தக் குழுக்கள் தெரிவித்துள்ளன. தரை வழியாகவும், கடல் வழியாகவும் இஸ்ரேலுக்குள் நுழைந்த நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்ரேலைச் சேர்ந்த பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தார்.
100 பேர் காயம் அடைந்துள்ளனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலும் விமானப்படை விமானங்கள்மூலம் காசா நகரில் தாக்குதலைத் துவக்கி உள்ளது. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
இஸ்ரேலின் தெற்கு பகுதியில் கடல் வழியாகவும், தரை வழியாகவும் ஊடுருவிய ஹமாஸ் குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் 35 பேரை ஹமாஸ் குழுவினர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இஸ்ரேல் பதிலடி:
இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதலைத் துவக்கி உள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது. காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரின் மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் துவக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் குழுவினரை பிடிக்கவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இஸ்ரேலை மற்ற நாடுகளுடன் இணைக்கும் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.காசாவில் 12 விமானப்படை விமானங்கள்மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது.காசாவைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீதும் விமானப்படை விமானங்கள்மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது.

இதனிடையே ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் கடந்த 5 நாட்களாக இஸ்ரேலியர்கள் தங்கி உள்ளதாகவும், அவர்களுக்குத் துணையாக ராணுவமும் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் வெளியேறாத காரணத்தினால் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலைத் துவக்கி உள்ளதாகத் தெரிகிறது.
பிரதமர் ஆலோசனை:
ஹமாஸ் குழுவினருக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ, அமைச்சர்கள், ராணுவத்தினருடன் ரகசிய இடத்தில் ஆலோசனை நடத்தினார்.இஸ்ரேல் மக்கள் போரை எதிர் கொண்டுள்ளதாகவும், ஹமாஸ் குழுவினருக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ கூறியுள்ளார். எதிரிகள் சிந்தித்து பார்க்க முடியாதபடி பதிலடி கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

சரியான தருணம்:
பாலஸ்தீனத்தை விடுவிக்க இதுவே சரியான தருணம். இஸ்ரேலை அழித்து ஒழிப்போம். பாலஸ்தீனியர்கள் ஆயுதங்களுடன் இஸ்ரேலை நோக்கி முன்னேற வேண்டும் என ஹமாஸ் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

