
சென்னை: அ.தி.மு.க., துவக்க விழா முன்னிட்டு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி, தமிழக அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
அ.தி.மு.க., வின் நிறுவன நாளை முன்னிட்டு, இன்று அக்கட்சியையும், அதன் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரையும் புகழ்ந்து ‘எக்ஸ் ‘ சமூக வலைதளத்தில், பதிவு ஒன்றை பவன் கல்யாண் வெளியிட்டு உள்ளார்.
அந்தப் பதிவில் பவன் கல்யாண் கூறியதாவது: அ.தி.மு.க., 53ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நன்நாளில், அதனது பொதுச்செயலாளர் பழனிசாமி, தலைமைக்கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர்., தொடங்கிய அ.தி.மு.க., தமிழகத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஆற்றல்மிக்க அரசியல் சக்தியாக உயர்ந்து ஆட்சி கட்டிலிலும் அமர்ந்து வரலாறு படைத்தது. தொலைநோக்கு கொண்ட அவரது எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களே அவரது பெருமைக்கு இன்றும் சான்றாகத் திகழ்கின்றன. நல்லாட்சிக்கும் நிர்வாகத்திற்கும் எம்.ஜி.ஆர்., எனது ஆசானாக நான் கருத இதுவே காரணம்.
அவரது மறைவுக்கு பிறகு அவர் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை கட்டிக்காத்ததோடு மட்டுமல்லாது தொலைநோக்கு கொண்டு தனது நிகரில்லா தலைமையால் மேலும் பல சாதனைகளைப் படைத்த பெருமை ஜெயலலிதாவை சாரும். அண்டை மாநில மக்கள்மீது அவர் கொண்டிருந்த மரியாதை போற்றுதலுக்குறியது.
பழனிசாமி தலைமையின் கீழ், எம்.ஜி.ஆரின் கொள்கைகளை அ.தி.மு.க., தொடர்ந்து காப்பாற்றி வருகிறது. பல சவால்களை எதிர்கொண்டிருக்கும் போதிலும் இக்கட்சி தமிழகத்தின் அடித்தட்டு மக்களின் உரிமைக்குரலாய் எம்.ஜி.ஆர்., வழியில் இன்றும் திகழ்கிறது.
ஜெயலலிதாவின் காலத்திலும், அவரது மறைவுக்கு பிறகும் அ.தி.மு.க., அரசின் முதல்வராக, அவரது வழியில் சிறப்பாகச் செயலாற்றிய பன்னீர்செல்வத்திற்கும் இந்நன்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது ஜனசேனா கட்சி சார்பாக அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்தப் பதிவில் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
சனாதன விவகாரத்தில், உதயநிதியை விமர்சித்துப் பேசிய பவன் கல்யாண், தற்போது அ.தி.மு.க., வைத்தொடர்ந்து புகழ்ந்து பேசி வருகிறார். இதற்கான காரணம் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கலாமென அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.



