முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாளை ஒட்டிச் சென்னை மாநிலக் கல்லூரி வாளகத்தில் அவரது முழு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.வி.பி.சிங் என்று அழைக்கப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங் 1931 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25 ஆம் நாள் அலகாபாத் நகரில் ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். புனே பெர்குஷன் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். பின்பு, 1950 ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.
மேலும், வி.பி. சிங் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். வி.பி.சிங் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர். வர்த்தகத் துறை துணை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளையும் வகித்தார். இதனைத் தொடர்ந்து, 1980 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று உத்திரபிரதேச மாநில முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வி.பி. சிங் அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்து சிறந்த முதலமைச்சராகத் திகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து, வி.பி.சிங் அவர்கள் 1984 ஆம் ஆண்டு நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய பதவிகளையும் வகித்தார். பின்பு, 1989 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வதார பிரச்சனையான காவிரி நதி நீர் பிரச்சனைக்குத் தீர்ப்பாயத்தை அமைத்துத் தந்தார்.
தமிழ்நாட்டிற்கு வி.பி.சிங் ஆற்றிய அரும் பணிகள் பல. சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டினார். அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வி.பி.சிங் அவர்களை பற்றிக் குறிப்பிடும் போது “அரசியல் நாகரீகத்துக்கும், பண்பாட்டுக்கும். உயர்ந்த லட்சியங்களுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கியவர்” என்று கூறினார்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக B.P. மண்டல் அவர்கள் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையைச் செயல்படுத்திய சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் ஆவார்.
இவ்வளவு சிறப்புமிக்க முன்னாள் இந்தியப் பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசு முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிக்கையினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதன்படி சென்னை மாநில கல்லூரியில் 52 லட்சம் மதிப்பில் புதிதாக வி.பி. சிங் சிலை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், இந்த விழாவில் வி.பி. சிங்கின் மனைவி சீத்தாகுமாரி, மகன்கள் அஜய் சிங், அபய் சிங், அமைச்சர்கள் துரை முருகன், கனிமொழி எம்பி , மற்றும் எம்பிக்கள்,எம்எல்ஏக்கள், தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

