சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.. நேற்றைக்கு சட்டசபையில் பேசிய வன்னி அரசு திமுகவை பார்த்து ,கடந்த முறை நாங்கள் 4 MLA -க்கள் வைத்திருந்தும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல் இருந்தார்கள்..ஆனால், தற்பொழுது 2 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்துக்கொண்டு அமைச்சரவையில் இருக்கிறோம் என்றார்.
இந்நிலையில், தேர்தலின் போது தனது வெற்றியை விடவும் வன்னி அரசு அண்ணனின் வெற்றி முக்கியம் என்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இருப்பினும் சட்டசபையில் அமைச்சர் வன்னி அரசின் பேச்சு திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது ..இதற்கு உதயநிதி சட்டசபையிலே வைத்து தக்க பதிலடியும் தந்துள்ளார்..இது குறித்து தற்பொழுது விரிவாக பார்க்கலாம்..!
தமிழ்நாடு அரசியலில் தற்போதைய பரபரப்பான விவாதப் பொருளாக மாறி இருப்பது திமுக, விசிக மற்றும் தவெக இடையேயான உறவு மற்றும் அரசியல் நகர்வுகள்தான். தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடந்த சில காலமாகவே திமுகவை விமர்சிக்கும் போக்கைக் கையிலெடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
குறிப்பாக, சட்டமன்றத்திலும் பொது மேடைகளிலும் விசிக தலைவர்கள் வைக்கும் தொடர்ச்சியான விமர்சனங்களும், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள அதிரடி மற்றும் சமரசப் பதிலும் அரசியல் அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
விசிகவின் புதிய அரசியல் பாதை குறித்துப் பார்க்கும்போது, கடந்த சில ஆண்டுகளாகவே திமுக கூட்டணியில் மிக முக்கிய அங்கம் வகித்து வந்த அக்கட்சி, தற்போது மெல்ல மெல்ல தவெகவின் அரசியல் பாதையை நோக்கி நகர்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சமூகநீதித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, விசிகவைச் சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு பேசிய பேச்சுக்கள் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த முறை 4 எம்எல்ஏ-க்கள் இருந்தபோது அதிகாரத்தில் பங்கு கொடுக்கவில்லை என்றும், தற்போது 2 எம்எல்ஏ-க்கள் இருந்தாலும் அமைச்சரவையில் இருக்கிறோம் என்றும் அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன், தவெக உடனான கூட்டணியை உறுதி செய்ததிலிருந்து திமுகவை மறைமுகமாகவும் சில நேரங்களில் நேரடியாகவும் சாடத் தொடங்கியுள்ளார். குறிப்பாக, தங்களுக்கு அதிகாரத்தில் உரிய இடம் வழங்கப்படவில்லை என்பதை பொது மேடைகளில் அவர் அழுத்தமாகப் பேசி வருகிறார்.
விசிகவில் ஆளூர் ஷாநவாஸ் தவிர மற்ற பல முக்கிய நிர்வாகிகளும் திமுகவை விமர்சிக்கும் போக்கையே கையாண்டு வருகின்றனர். தவெக கூட்டணியில் இருப்பதால், தலித் பிரச்சனைகளில் திமுக கோட்டைவிட்ட இடங்களைச் சுட்டிக்கா ட்டி விசிக தனது அரசியல் களத்தை வலுப்படுத்தப் பார்ப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்ற வேளையில், அமைச்சர் வன்னி அரசு முன்வைத்த சில குற்றச்சாட்டுகள் விவாதங்களை மேலும் கிளப்பின. வன்னி அரசு பேசுகையில், தங்களுக்கு தேர்தலில் களத்தில் நின்று வேலை செய்த திமுகவின் , எவ வேலு , பன்னீர் செல்வம், கனிமொழி உள்ளிட்ட திமுக தலைவர்களுக்கு தாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்..
அப்போது , சட்டமன்றத்தில் விசிக அமைச்சர் வன்னி அரசு என்ன பேசினாலும்.. முழுமையாக பேசவிடாமல் சபாநாயகரும், தவெக அமைச்சரும் குறுக்கீடு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இன்னைக்கு காலையில் கூட.. வன்னி அரசு பேசும்போது திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு நன்றி சொல்லியிருந்தார்.
உடனே குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன்.. மானிய கோரிக்கையை மட்டும் வாசிக்க வேண்டும் என்று சொன்னதும் குறிப்பிடத்தக்கது..மேலும், தங்களது தலைவர் திருமாவளவனுக்கு எதிர்க்கட்சி தரப்பில் உள்ள யாரும் உரிய நன்றியையோ அல்லது மரியாதையோ தெரிவிக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படையாக முன்வைத்தார்.
கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் நான்கு இடங்களில் வென்றபோதும் அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதையும், தவெக அரசு தற்போது தமக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் வன்னி அரசு மற்றும் விசிக தரப்பிலிருந்து தொடர்ச்சியாக எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கும், அதிருப்திகளுக்கும் சட்டமன்றத்திலேயே மிகச்சிறந்த மற்றும் எதிர்பாராத ஒரு பதிலை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அளித்தார்.
திமுகவிற்கும் தொல். திருமாவளவனுக்கும் இடையே இருந்தது வெறும் தேர்தல் உடன்பாடு அல்லது தேர்தலுக்காக மட்டும் மாறிக்கொள்ளும் சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல; அது ஒரு பலமான கொள்கைக் கூட்டணி என்று அவர் தெளிவுபடுத்தினார். மேடைகளிலும் பலமுறை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது போல, தமக்கு அரசியல் ஆசானாகத் திகழ்பவர் தொல். திருமாவளவன் தான் என்று அவர் பகிரங்கமாகப் பேசினார்.
எனவே, அவருக்கு எப்போதுமே தங்களது நன்றியும் மரியாதையும் உண்டு என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்தார். உதயநிதியின் இந்த எதிர்பாராத மற்றும் முதிர்ச்சியான பதிலைக் கேட்டதும், அமைச்சர் வன்னி அரசு தனது முகத்தில் புன்னகையை உதிர்த்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதன் மூலமாக விசிக கொஞ்சம் கொஞ்சமாக தவெகவின் திமுக எதிர்ப்பு அரசியலில் கலப்பதாக அரசியல் விமர்சகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். தவெக கூட்டணியில் இருப்பதால், திமுக எதிர்ப்பு அரசியல் தான் எடுபடும் என்பதையும் விசிகவினர் புரிந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.
அதற்கேற்ப தலித் பிரச்சனைகளில் திமுக கோட்டைவிட்ட இடங்களையும் விசிக பேசத் தொடங்கி இருக்கிறது. இதனால் திமுக உடன் சுமார் 9 ஆண்டு காலம் தொடர்ந்து விசிக பயணித்ததை போல், தவெக உடனும் தொடர்ச்சியாக பயணிக்கும் எண்ணத்திற்கு திருமாவளவன் வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது..