
விக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடக்கும் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டு வந்த சாராயத்தை குடித்த 7 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கியது.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கடத்துவது தெரியவந்தால், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தல் நடக்கும் விக்கிரவாண்டி அருகே பூரிகுடிசை என்ற கிராமத்தில், புதுச்சேரியிலிருந்து கொண்டு வந்த சாராயத்தை குடித்த 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். வாந்தி, மயக்கத்துடன், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி சாராயம் வாங்கி வந்த நபர்மீது காஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் காரணமாக விக்கிரவாண்டி தொகுதியில் டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டு உள்ளன.


